×
Saravana Stores

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் தர்ணா

தர்மபுரி, மார்ச் 23:  பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு பாரம் ஏற்றி வரும் வாகனங்களை தாமதப்படுத்தாமல் அரவைக்கு அனுப்ப வலியுறுத்தி, விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சக்கரை ஆலையில் கரும்பு அரவை நடந்து வருகிறது. காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தர்மபுரி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து சர்க்கரை ஆலைக்கு லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில கரும்புகள் கொண்டு வரப்படுகிறது. லாரிகளில் வரும் கரும்புகளை உடனே ஆலைகளில் இறக்கப்படுகிறது. டிராக்டரில் வரும் கரும்புகளை நாள்கணக்கில் காத்திருக்க வைத்து கரும்பு இறக்கப்படுகிறது. இது தொடர்பாக டிராக்டர்களில் கரும்பு பாரம் ஏற்றி வந்தவர்களுக்கும், லாரிகளில் கரும்பு பாரம் ஏற்றி வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

காக்க வைத்து கரும்பு இறக்கப்படுவதால், கரும்பின் எடை குறைந்து இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இதையடுத்து சர்க்கரை ஆலை உள்ளே டிராக்டர்களை நிறுத்தி சமையல் செய்து நூதன முறையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இத்தகவல் கிடைத்து ஆலை அதிகாரிகள் சமரசம் செய்ததால், அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு டிராக்டர்களில் கரும்பு பாரம் ஏற்றி வந்துள்ள வாகனங்களை நாள் கணக்கில் காத்திருக்க வைப்பதால், கரும்பின் எடை குறைந்து இழப்பு ஏற்படுகிறது. லாரிகளில் வரும் கரும்புக்கு அரவை நேரம் 24 மணி நேரமும், டிராக்டரில் வரும் கரும்புக்கு அரவை நேரம் 50லிருந்து 60 மணி நேரமும் இருப்பதால் வெயிலில் கரும்பு காய்ந்து எடை குறைகிறது. லாரிக்கு வழங்கும் நேரப்படி டிராக்டருக்கும் வழங்க வேண்டும். வாகனங்களுக்கு டோக்கன் வழங்குவதை ஒழுங்குப்படுத்த வேண்டும். ஆலைக்குள் வந்த கரும்பு பாரத்துடன் காத்திருக்கும் வாகனங்களை விரைந்து அரவைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா