வேப்பூர், மார்ச் 23: வேப்பூர் அடுத்த மங்களூர் கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து கடலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் நள்ளிரவு 12 மணியளவில் மங்களூர் கிராமத்தில் அழகன் மகன் முருகன் (41) என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் கடத்துவதற்காக 1000 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குடிமை பொருள் வழங்கல் மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார், 1000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, முருகனை கைது செய்தனர். கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து வேப்பூர் பகுதியில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீஸ் கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் பகுதியில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதால் அப்பகுதியில் சிறப்பு கண்காணிப்பு குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.