தர்மபுரி, மார்ச் 21: தர்மபுரியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 25 பேருக்கு ரூ.8.60 லட்சத்தில் இலவச தையல் இயந்திரங்களை கலெக்டர் சாந்தி வழங்கினார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 532 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களை பெற்றுகொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி தீர்வு காண உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தர்மபுரி வட்டார வணிக வள மையம், மொரப்பூர் வட்டாரம் சார்பில் 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.8.60 லட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு கடன் உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர் இக்பால், பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் கண்ணன், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் பத்ஹி முகம்மது நசீர் உட்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.