புதுச்சேரி, மார்ச் 22: புதுச்சேரி அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர்கள் கூட்டமைப்பினர் பாண்லே மேலாண் இயக்குனர் முரளியை சந்தித்து மனு அளித்தனர். அதில், புதுச்சேரியில் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உற்பத்தியாளரிடம் இருந்து வாங்கிய பாலுக்கு நான்கு மாதங்களாக பண பட்டுவாடா செய்யப்படாமல் இருக்கிறது. அதனால் 23ம்தேதி (நாளை) பாலை அனைத்து குளிரூட்டும் நிலையத்திலிருந்து ஒன்றியத்துக்கு பாலை அனுப்பாமல் நிறுத்தி வைக்க உள்ளோம். தமிழகத்தில் இருந்து புதுவைக்கு பால் சப்ளை செய்த நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியதால் புதுவைக்கு பால் வரத்து குறைந்துள்ளது. இதனிடையே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், பாண்லேவுக்கு பாலை அனுப்பாமல் நிறுத்தினால் பால்தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாண்லே பால் உற்பத்தியாளர்களிடம் கேட்டபோது, வழக்கமாக மாதந்தோறும் 15 நாட்களுக்கு ஒருமுறை பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுக்கப்படும். கடந்த ஜனவரி முதல் உரிய நேரத்தில் பணம் தரப்படுவதில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம். ஜனவரி மாதத்தொகையை தருகின்றனர். ஒவ்வொரு 15 நாட்களுக்கும் மொத்தமாக ரூ.3 கோடி வரை பணம் பட்டுவாடா செய்யாததால் தற்போது வரையிலும் ரூ.10 கோடி வரை பாக்கி உள்ளது. இதனால் மாடுகளுக்கு தீவனம் வாங்க முடியாத அவலத்தில் உற்பத்தியாளர்கள் உள்ளனர். எனவே நாளை (23ம்தேதி) முதல் பாலை கொள்முதல் செய்து குளிரூட்டும் நிலையத்தில் வைப்போம். பாண்லேவுக்கு அனுப்ப மாட்டோம் என்றனர்.