×

அமைச்சரவையில் பங்கு கேட்டு எடப்பாடிக்கு செக்: அதிமுகவை அபகரிக்க டிடிவி மாஸ்டர் பிளான்? கூட்டணியில் இருந்து கொண்டே குடைச்சல்; பாஜ திரைமறைவில் போடும் பக்கா ஸ்கெட்ச்

மதுரை: அதிமுக – பாஜ கூட்டணியில் இணைவாரா? மாட்டாரா என்ற நிலையில் இருந்த டிடிவி.தினகரன், தற்போது எடப்பாடிக்கு செக் வைக்கும்விதமாக அடுத்தடுத்து பேசி வருவது, அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகளோடு திமுக இம்முறையும் தேர்தலை சந்திக்க தயார் நிலையில் உள்ளது. பாஜவை கடுமயாக விமர்சித்து வந்த அதிமுக கடைசியில் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணியில் டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சை இணைக்க பாஜ தரப்பு கோரிக்கையை முதலில் எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்தார். இதனால் பாஜ கூட்டணியிலிருந்து டிடிவி.தினகரன் விலகினார்.

‘நோட்டாவோடு போட்டியிடும் பாஜவுடன் கூட்டணியா?’ என ரைமிங் – டைமிங்கோடு விமர்சித்தார். மேலும், துரோகத்திற்கான நோபல் பரிசை எடப்பாடிக்கு வழங்கலாம் என்கிற அளவுக்கு பரிந்துரை எல்லாம் செய்தார். கடைசியில், பாஜ மேலிடத்தின் தொடர் அழுத்தத்தால், அதிமுக – பாஜ கூட்டணியில் இணைந்தார். என்னதான் கூட்டணியில் இணைந்தாலும், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கூட்டணிக்குள் குடைச்சல் தரத் தொடங்கி விட்டார் டிடிவி.தினகரன்.

தேனியில் டிடிவி.தினகரன் அளித்த பேட்டியில், ‘‘ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தாமல் இருந்தால் அவரே முதல்வராக நீடித்திருப்பார்’ என்றார். சசிகலாவை முதல்வராக்கும் ஆசையில்தான், ஓபிஎஸ்சை டிடிவி அன் கோ டார்ச்சர் செய்தனர். இதை கண்டித்துதான் ஜெயலலிதா சமாதி முன்பு ஓபிஎஸ் தர்ம யுத்தமே நடத்தினார். நிலைமை இப்படியிருக்க, ஓபிஎஸ் மீது எப்படி பழி போடலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். மேலும், ஓபிஎஸ்சின் தவறான முடிவால் தான் எடப்பாடி முதல்வராகி விட்டார் என்று மறைமுகமாக குத்திக் காட்டுவதாகவே உள்ளதாக அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

மேலும், அதிமுக தலைமையில்தான் கூட்டணி என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார். கூட்டணி ஆட்சி குறித்து இதுவரை பேசவில்லை. ஆனால், டிடிவி பேட்டியின்போது, தன்னை நம்பி வந்தவர்கள் சிலரை அமைச்சராக்க வேண்டும் என சைசாக ஒரு பிட்டை தொடர்ந்து போட்டு, அதிமுக கூட்டணிக்கு நெருக்கடி தந்து வருகிறார். தேனியில் பேட்டியின்போது தேர்தலில் போட்டியில்லை என்று கூறினாலும், போட்டியிட்டாலும் போட்டியிடுவேன் என நிர்வாகிகளிடம் ரகசியமாக தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. டிடிவியின் இந்த இரட்டை நிலை, அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘பாஜ கட்சி கூட கூட்டணி ஆட்சி பற்றி பேசவில்லை. இவர் மறைமுகமாக கூட்டணி ஆட்சியை வலியுறுத்துகிறாரே? அதிமுகவை கைப்பற்ற திரைமறைவில் டிடிவி.தினகரனை, பாஜ இயக்கி வருகிறதா’ என்ற சந்தேகம் அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. ‘இவரை இதற்குத்தான் கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்றோம். இன்னும் இவரால் எத்தனை பிரச்னை வரப்போகிறதோ’ என இப்போதே அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் புலம்பி வருகின்றனர். கூட்டணியில் இவரை கொஞ்சம் கட்டுப்படுத்தி வைக்க வேண்டுமென எடப்பாடியிடமும் சிலர் கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, டிடிவி மற்றும் அவரது கட்சியினரிடமும் ரொம்ப நெருக்கம் காட்ட வேண்டாமென அதிமுக தலைமை நிர்வாகம் தரப்பில் மறைமுகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* எப்படி ஓட்டு கேட்பது? அமமுகவினர் அப்செட்
கடந்த 8 ஆண்டுகளாகவே எடப்பாடி பழனிசாமியை கடுமையாக டிடிவி உள்ளிட்ட அமமுகவினர் விமர்சித்து வந்தனர். இதனாலேயே அமமுகவுக்கு தனி இமேஜ் இருந்தது. தற்போது கூட்டணியில் இணைந்ததால், மக்களிடம் போய் அதிமுகவுக்கு எப்படி வாக்கு கேட்டு நிற்பது என அமமுகவினர் புலம்பி வருகின்றனர்.

* அப்ப ஓகே… இப்ப இல்லை…
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் தோல்வி அடைய அமமுகவும் ஒரு காரணமென கூறப்பட்டது. ஆனால், அதன்பின்னர் டிடிவியின் ஆர்வமில்லா அரசியல் பணி, முரண்பாடான நிலை உள்ளிட்ட காரணங்களால் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், தொண்டர்கள் பல கட்சிகளுக்கு சென்று விட்டனர். இந்த சூழலில் அதிமுக கூட்டணியில் இணைந்தாலும், டிடிவியால் லாபம் ஒன்றுமில்லை என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Weitapadi ,DTV ,Konde Khodichal ,Baja ,Madurai ,Adimuka-Bahja ,Matara ,DINAKARAN ,EDAPADI ,Tamil Nadu ,
× RELATED கலவரக்கார புத்திகொண்ட பாசிச...