×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள்: அடுத்த மாதம் 17ம் தேதி இறுதிப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை கடைசி நாள் ஆகும். அடுத்த மாதம் 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் 4ம் தேதி, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி என்கிற எஸ்ஐஆர் பணி தொடங்கியது. கடந்த மாதம் 14ம் தேதி வரை வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 5 கோடியே 43 லட்சத்து 76 ,757 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தனர்.

அதாவது 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தனர். அதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 9 ஆயிரம் ஆகும். இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் முகவரியில் வசிக்காதவர்கள் எண்ணிக்கை மட்டும் 66 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் 3.98 லட்சம் ஆகும். இந்த வரைவு பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க டிசம்பர் 19ம் தேதியில் இருந்து ஜனவரி 18ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

அதன்படி அதற்கான காலஅவகாசம் கடந்த 18ம் தேதி முடிவடைய இருந்தது. ஜனவரி 18ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 18 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். பெயர்களை நீக்க 32,288 பேர் விண்ணப்பித்து இருந்தனர். பெயர் சேர்க்க காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்ததை தொடர்ந்து கூடுதலாக 12 நாட்கள் அதாவது 30ம் தேதி (நாளை) வரை கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது. நேற்று வரை வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க 16,02,555 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்கம் செய்ய 1,03,115 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், 18 வயது மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஆன்லைன், வாக்குச்சாவடி மையங்கள், பிஎல்ஏக்களிடம் விண்ணப்பங்களை கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பெறப்பட்ட சுமார் 16 லட்சம் மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 17ம் தேதி வெளியிடப்படும். இறுதி பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Tamil Nadu ,Intensive Voter ,SIR ,
× RELATED தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு