×

தமிழ்நாட்டில் உள்ள வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்த உயர்நிலைக்குழு அமைப்பு: ஒன்றிய அரசு தகவல்

சென்னை: சமீபத்தில் ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஈரோட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் துறை சம்பந்தப்பட்டவர்களை சந்தித்தார். அப்போது வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் எதிர்கொள்ளும் செயல்பாடு சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் சந்தை பிரச்னைகள் எடுத்துரைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு உயர்நிலைக் குழுவை அமைக்க வேளாண் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

விரிவான மற்றும் கள அடிப்படையிலான மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக இந்தக் குழுவில் நபார்டு வங்கி, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு, சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, சிறு விவசாயிகள், வேளாண் வணிக கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு, ஐசிஏஆர் தேசிய வாழை ஆராய்ச்சி மையம், வேளாண் உற்பத்தியாளர் கூட்டமைப்பு பிரதிநிதிகளும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளின் நிர்வாகம், மேலாண்மை நடைமுறைகள், வணிகச் செயல்பாடுகள், தொழில்நுட்ப ஆதரவு, தொடர்புகள், ஒருங்கிணைப்பு, மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல், சவால்களை இந்தக் குழு ஆய்வு செய்யும். வாழை, மஞ்சள், தென்னை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பயிர் வகைகள், இயற்கை வேளாண் சாகுபடி முறைகள் பற்றி இந்தக் குழு சிறப்பு கவனம் செலுத்தும்.

இதற்காக இந்தக் குழு களப் பயணங்களை மேற்கொள்வதோடு, வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், அவற்றின் உறுப்பினரான விவசாயிகள், சந்தைப்பிரிவுகள் மற்றும் இதர பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தும். இந்தக் குழு தனது இறுதி அறிக்கையை 2 மாதங்களுக்குள் ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையமும், ஐதராபாத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையமும் இந்தக் குழுவிற்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்யும்.

Tags : Tamil Nadu ,Union government ,Chennai ,Union Agriculture and Farmers ,Welfare Minister ,Shivraj Singh Chouhan ,Erode ,
× RELATED தமிழகத்தில் 2 நாட்களுக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு