×

மும்பை மெட்ரோ ரயிலில் ‘புல்-அப்ஸ்’ எடுத்த நடிகருக்கு ரூ.500 அபராதம்..? கடும் விமர்சனத்தால் தன்னிலை விளக்கம்

மும்பை: மெட்ரோ ரயிலில் சாகசம் செய்த நடிகர் வருண் தவானுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என அவரது குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்தி திரைப்பட நடிகர் வருண் தவான் ‘பார்டர் 2’ திரைப்படத்தின் விளம்பர பணிகளுக்காக மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் ரயிலின் மேற்கூரையில் உள்ள கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி ‘புல்-அப்ஸ்’ உடற்பயிற்சி செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

கைப்பிடிகள் பயணிகளின் பாதுகாப்பிற்காக உள்ளதே தவிர சாகசங்கள் செய்ய அல்ல என்றும், இது பொதுச் சொத்தை சேதப்படுத்தும் செயல் என்றும் மெட்ரோ நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சம்பவத்தை தொடர்ந்து மெட்ரோ ரயில்வே சட்டம் 2002ன் கீழ் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறி, வருண் தவானுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக நேற்று விளக்கம் அளித்த வருண் தவானின் குழுவினர், ‘நடிகருக்கு எந்தவிதமான அபராதமும் விதிக்கப்படவில்லை. இந்த சம்பவம் புரிதலின்மை காரணமாக நடந்தது. அதிகாரிகளுடன் பேசி பிரச்னை சுமூகமாகத் தீர்க்கப்பட்டது’ என்று உறுதிப்படுத்தினர். முன்னதாக நடிகரின் செயலை கண்டித்து மகா மும்பை மெட்ரோ ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் வெளியிட்டிருந்த பதிவும் பின்னர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Mumbai ,Varun Dhawan ,Mumbai Metro ,
× RELATED போயிங் நிறுவனத்தின் புத்தம் புதிய 787-9...