×

டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பதில் இழுபறி: ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் கிண்டல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டி20 உலகக் கோப்பைக்கான தனது 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருந்தாலும், டி20 உலகக் கோப்பை தொடரில் அந்த அணி விளையாடுவது இன்னும் உறுதியாகவில்லை. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில், பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவுக்கு வர மறுத்த வங்கதேச அணி நீக்கப்பட்டது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் இந்தத் தொடரை அல்லது குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி வருகிறது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்த இறுதி முடிவு வரும் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்த முடிவற்ற நிலையை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கடுமையாகக் கிண்டல் செய்துள்ளது. பாகிஸ்தான் அணி விளையாடுகிறதா இல்லையா என்பதை விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் பிப்ரவரி 2-ம் தேதி விலகுவதாக அறிவித்தால், அந்த இடத்தைப் பிடித்து இலங்கைக்குப் பறக்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் பதிவிட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 7-ம் தேதிக்குள் கொழும்பு செல்வதற்கான விமானப் பயணத் திட்டங்களை வகுப்பதே தற்போது தங்களுக்கு இருக்கும் பெரிய தலைவலி என்றும், தங்கள் அணியின் தொடக்க ஆட்டக்காரருக்குத் தூக்கமின்மை பிரச்சனை இருப்பதால் பயணக் களைப்பு ஒரு தடையாக இருக்காது என்றும் அந்தப் பதிவில் கிண்டலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், வங்கதேசத்திற்குப் பதிலாக ஏற்கனவே ஸ்காட்லாந்து அணி தொடருக்குள் நுழைந்துவிட்டது. பாகிஸ்தான் அணி விளையாடும் பட்சத்தில், பிப்ரவரி 7-ம் தேதி நெதர்லாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியைத் தொடங்கும். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 10-ல் அமெரிக்காவுடனும், பிப்ரவரி 15-ல் இந்தியாவுடனும், பிப்ரவரி 18-ல் நமீபியாவுடனும் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியில் அனுபவ வீரர் பாபர் அசாம் சேர்க்கப்பட்டுள்ளார், ஆனால் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Pakistan ,T20 World Cup ,Iceland Cricket Board ,Pakistan Cricket Board ,India ,Sri Lanka ,
× RELATED இந்திய அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி..!