×

சுற்றுலா பயணிகளிடம் போலி தேன் விற்பனை

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கூடலூர் : நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா நகரமான ஊட்டிக்கு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் – நடுவட்டம் வழியாக சென்று திரும்புகின்றனர். இந்த சாலையில் உள்ள தவளை மலை, ஊசிமலை காட்சி முனை, யுகாலிப்ஸ் மர காடுகள், டிஆர் பஜார் ஏரி, பைக்காரா ஏரி மற்றும் நீர்வீழ்ச்சிகள், ஷூட்டிங் மட்டம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் சாலை ஓரத்தில் கடை வைத்திருக்கும் பல்வேறு சிறு வியாபாரிகள் தங்களிடம் உள்ள பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளால் சிறு வியாபாரிகள் பயனடைந்து வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சிலர் போலியான தேன் விற்பனை செய்து சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தேனீக்கள் கொண்ட தேன் ராடுகளை பெரிய பாத்திரத்தில் வைத்து இயற்கையான தேன் வடித்து கொடுப்பது போல விற்பனை செய்து வருகின்றனர்.

உண்மையில் இது இயற்கையான தேன் அல்ல என்றும், சர்க்கரை பாகு மற்றும் சில கலவைகள் அடங்கிய செயற்கைத்தேன் என்பதால் இவற்றை வாங்கி செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கூடலூர் நகராட்சி கவுன்சிலர் உஸ்மான் கூறுகையில், ‘‘சுற்றுலா பயணிகளை குறிவைத்து விற்பனை செய்யப்படும் இந்த தேன் உண்மையில் இயற்கை தேன் அல்ல. சர்க்கரைப்பாகில் செயற்கை நிறமிகள் சேர்த்து இந்த தேன் விற்பனை செய்யப்படுகிறது. சுத்தமான இயற்கை தேன் என விற்பனை செய்யப்படும் இதனை வாங்கி செல்லும் சுற்றுலா பயணிகள் தங்கள் சிறிய குழந்தைகளுக்கும் இவற்றை கொடுக்கின்றனர்.

ஒரு கிலோ தேன் ஆயிரம் முதல் 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் இந்தத் தேன் வியாபாரம் குறித்து பலமுறை வனத்துறை, காவல்துறை, உணவு பாதுகாப்பு துறை, மற்றும் அப்பகுதி உள்ளாட்சித் துறை ஆகியவற்றிற்கு தொலைபேசியிலும் நேரிலும் புகார் அளித்துள்ளேன்.

மாவட்ட ஆட்சியரிடமும் இது குறித்து நேரில் புகார் அளித்துள்ளேன். ஆனால், இதுவரை இதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. கூடலூர் ஊட்டி சாலையில் மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தேன் விற்பனை நடைபெற்று வருகிறது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இது போன்ற சுகாதாரமற்ற முறையில் கலப்பட பொருட்களை விற்பனை செய்து சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் இந்த செயற்கை தேன் விற்பனையை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Gudalur ,Kerala ,Karnataka ,Ooty ,Nilgiris district ,Gudalur-Naduvattam ,Thavala Hill ,Usimalai ,
× RELATED நெல்லையில் முறையாக சிகிச்சை அளிக்காத...