மதுரை, ஜன. 26: குடியரசு தின விழாவை முன்னிட்டு, மதுரையில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கோயில்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், மதுரை பழங்காநத்தம் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள தெருவிற்குள், நேற்று இரவு மர்ம நபர்கள் 4 பேர் வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் திடீரென பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்ததால், அதிலிருந்து பெட்ரோல் சிதறிய இடங்களில் மட்டும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை கண்டித்த இருவரை அந்த நபர்கள் கத்தியால் வெட்டி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில், தனிப்படை யினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அங்குள்ள சிசிடிவி பதிவுகள் அடிப்படையில், பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
