சிங்கம்புணரி,ஜன.24: சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய சாலைகள் அமைப்பதற்கு ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணிகள் தொடங்க துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமை வகித்தார். கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் பேசும்போது, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2025-26ன் கீழ் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சதுர்வேதமங்கலம் ஊராட்சி வாடத்திப்பட்டி கிராமப் பகுதியில் 35.57 லட்சம் மதிப்பீட்டில் திண்டுக்கல்-காரைக்குடி சாலை முதல் வாடத்திப்பட்டி சாலை வரையும், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முசுண்டப்பட்டி ஊராட்சி 48.13 லட்சம் மதிப்பீட்டில் திருமலைக்குடி மாவட்ட எல்லைச் சாலையும், மேலவண்ணாரிருப்பு ஊராட்சி பகுதியில் 199.60 லட்சம் மதிப்பீட்டில் உரத்துப்பட்டி சாலை முதல் கீழவண்ணாரிருப்பு சாலை என மொத்தம் 2.83. கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைப்பதற்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். இதில் உதவி இயக்குநர் ரவி, சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காதர் முகைதீன், முனியரசு, எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரன், லட்சுமணராஜு, திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
