கொல்கத்தா: கொல்கத்தாவில் சர்வதேச புத்தக கண்காட்சியை முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:மாநிலத்தில் எஸ்ஐஆர் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் வேதனைகள் குறித்த 26 கவிதைகள் தொகுப்பான எனது 162வது புத்தகம் கண்காட்சியில் வெளியிடப்படும். முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், சிறப்பு தீவிர திருத்த முகாம்களில் விசாரணைக்காக வரிசையில் பல மணி நேரம் நிற்க வேண்டியுள்ளது. இதனால் 110 பேர் பலியாகி விட்டனர். முரண்பாடுகள் என்ற பெயரில், பல ஆண்டுகளாக அறியப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வங்காளிகளின் குடும்ப பெயர்களை பிரச்னை ஆக்குகிறார்கள். நான் மம்தா பானர்ஜி மற்றும் மம்தா பந்தோபாத்யாய் என இரு பெயர்களிலும் அறியப்படுகிறேன். பிரிட்டிஷ் ஆட்சியின் போது தாக்குர், தாகூர் என்றும் அழைக்கப்பட்டார். வங்க கவிஞர் ரவீந்திர நாத் தாக்குர் இருந்திருந்தால் அவருக்கும் இதே நிலை இன்று ஏற்பட்டிருக்கும். முதியவர்களிடம் பிறப்பு சான்று கேட்கப்படுகிறது. அவர்களை ஏன் துன்புறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
