வேலூர், ஜன.23: பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் 8 லட்சம் பொதுமக்கள் பயணம் செய்தனர். இதன் மூலம் ரூ.1 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக வேலூர் மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த 15ம்தேதி முதல் 3 நாட்கள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வெளியூர்களில் தங்கி கல்வி பயில்பவர்கள், வேலை செய்பவர்கள், குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதன்படி வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 750க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையொட்டி சிறப்பு பஸ்கள் சென்னை, திருச்சி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. கடந்த 12ம் தேதி முதல் 15ம்தேதி வரை சுமார் 4 லட்சம் பொதுமக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட அரசு சிறப்பு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். அதேபோல், பொங்கல் பண்டிகை முடிந்து, மீண்டும் திரும்பி செல்லும் வகையில், சிறப்பு பஸ்கள் கடந்த 17, 18, 19ம் தேதிகளில் இயக்கப்பட்டன. இதன்மூலம் சுமார் 4 லட்சம் பொதுமக்கள் பயணம் செய்தனர். வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் பொங்கல் பண்டிகையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களின் மூலம் மொத்தம் 8 லட்சம் பொதுமக்கள் பயணம் செய்தனர். இதன் மூலம் வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு சுமார் ரூ.1 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
