×

புதிதாக தேர்வான நில அளவர்கள் 42 பேருக்கு 90 நாட்கள் பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில்

வேலூர், ஜன.22: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த புதிதாக தேர்வு செய்யப்பட்ட நில அளவர்களுக்கு 90 நாட்கள் பயிற்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் புதியதாக நியமனம் பெற்ற நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு விதிகளின்படி 90 நாட்கள் நிலஅளவை பயிற்சி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நில அளவை பயிற்சி வழங்குவதற்கு ஏதுவாக உதவி இயக்குநர், மண்டல துணை இயக்குநர்களால் 8 பயிற்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டது.

அதன்படி, வேலூர் அரசு பொறியியல் கல்லூரி பயிற்சி மையமாக தேர்வு செய்யப்பட்டது. இப்பயிற்சி மையத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த 36 நில அளவர்கள் மற்றும் 6 வரைவாளர்கள் என மொத்தம் 42 நபர்களுக்கு நில அளவை பயிற்சி 90 நாட்கள் பயிற்சி வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். நிலஅளவை துறை உதவி இயக்குனர் குமணன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, புதிதாக தேர்வு செய்யப்பட்ட 42 பேருக்கும் முதல் 60 நாட்களுக்கு நிலம் அளவீடு, பட்டா பிரித்தல் உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகளும், அடுத்த 30 நாட்கள் கணினி முறையில் நிலப்பதிவேடுகளை பதிவேற்றம் செய்வது தொடர்பான பயிற்சிகளை 1 ஆய்வாளர், 3 சார் ஆய்வாளர்கள், 1 தலைமை வரைவாளர், 1 முதுநிலை வரைவாளர், 2 புல உதவியாளர்களை கொண்டு நில அளவை பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore ,Tiruvannamalai ,Tirupattur ,Ranipet ,Collector ,Tamil Nadu Public Service Commission… ,
× RELATED ஆர்டிஓ வாகனத்தை கிராம மக்கள் முற்றுகை...