அதிமுகவுடன் அமமுக கூட்டணி சேர்ந்தது ஏன்? எடப்பாடிக்கு பதவி ஆசைகாட்டி அரசியலில் ஓரம் கட்ட முடிவு; அண்ணாமலை-டிடிவி தினகரன் ரகசிய திட்டம் அம்பலம்

 

சேலம்: எடப்பாடிக்கு எதிராக இருந்த டிடிவி தினகரன் திடீரென அதிமுக கூட்டணியில் சேர்ந்தது ஏன்? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. நீங்கள் தான் முதல்வர் என ஆசைக்காட்டி எடப்பாடியை அரசியலில் இருந்தே ஓரம்கட்ட தீட்டியுள்ள ரகசிய திட்டம் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமமுக என்ற கட்சியை தொடங்கினார். அதே போல ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தொண்டர்கள் மீட்பு கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் பாஜகவுடன் நெருக்கமாக இருந்தனர். ஆனால் இருவரையும் கூட்டணியில் சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் கடும்கோபம் அடைந்த தினகரன், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறியதுடன், இருவரும் பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்தனர். அதே நேரத்தில் இவர்கள் இருவரையும் கூட்டணியில் சேர்க்க பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ‘‘எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேருவதற்கு பதிலாக தூக்கு மாட்டி கூட தொங்கிவிடுவோம்’’ எனவும், ‘‘துரோகிகளுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் பழனிசாமிக்கு கொடுக்கலாம்’’ எனவும் தினகரன் கூறினார். இதற்கு எடப்பாடி பழனிசாமியோ, ‘‘டிடிவி தினகரன் ஒரு 420’’ என கடுமையாக தாக்கினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் டிடிவி தினகரன் நேற்று பாஜக-அதிமுக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் இவ்வளவு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் தினகரன், நேற்று திடீரென பாஜக-அதிமுக கூட்டணியில் சேர்ந்ததில் பெரும் சதித்திட்டம் மறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிமுக மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது: பாஜக மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரியான இவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழ்நாடு பாஜகவில் சேர்ந்தார். உடனடியாக அவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் மாநில தலைவரானார். இவர் கரூர் கொங்கு கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் தொடர்ந்து பொய்களை கூறி பாஜ முக்கிய நிர்வாகிகளை கட்சியில் இருந்து ஓரம்கட்டினார். இதனால் அவர்கள் அனைவரும் இவருக்கு எதிராக திரண்டனர். அதே நேரத்தில் அதிமுக மாலுமி இல்லாத கப்பலாக தள்ளாடியது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இவரும் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். அக்கட்சியை தனது தலைமைக்கு கீழே கொண்டு வர அண்ணாமலை திட்டம் தீட்டி செயல் பட்டார்.

ஆனால் கொங்கு சமுதாய மக்களின் தலைவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து வருவது அவருக்கு பிடிக்கவில்லை.
இதனை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த அதிரடியாக வெளியே வந்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். என்றாலும் தேர்தலில் பெரும் வெற்றியை பெறுவோம் என பாஜக மேலிடத்தில் அண்ணாமலை உறுதியாக கூறினார். ஆனால் ஒரு தொகுதியில் கூட பாஜக கூட்டணி வெற்றிபெறவில்லை. இதனால் டெல்லி தலைமை கடும் அதிர்ச்சியடைந்தது. அதன்பிறகு தான் அண்ணாமலை கூறுவது எல்லாம் பொய் என்பதை மேலிடம் தெரிந்து கொண்டது. தமிழக மூத்த தலைவர்கள் அவரைப்பற்றி மேலிடத்தில் எடுத்து கூறினர். என்றாலும் எடப்பாடி பழனிசாமியை பாஜக விடுவதாக இல்லை. எப்படியாவது தமிழ்நாட்டில் கால் ஊன்றிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இவர் மீதான பல்வேறு ஊழல் வழக்குகளை கையில் எடுத்துக்கொண்டு மிரட்டினர். பாஜகவை பொறுத்தவரையில் மத்தியில் தொடர்ந்து 3 முறை ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு பெயர் சொல்லும் வகையில் எதுவும் செய்யவில்லை. தொடர்ந்து தமிழக அரசுக்கும் மக்களுக்கும் எதிராகவே இருந்து வருகின்றனர். பேரிடர் காலங்களில் கேட்ட நிதி கூட கொடுக்கவில்லை. ஆண்டுக்கு ஒரு நல்லதிட்டத்ைத செயல் படுத்தினால்கூட மக்கள் அவர்களை நம்புவார்கள்.

அப்படி எதுவும் செய்யவில்லை. இதனால் அவர்களால் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை. அதனால் அதிமுகவுடன் சேர்ந்து தமிழகத்தில் எப்படியாவது கால்ஊன்றி விடவேண்டும் என்பது தான் அவர்களின் திட்டமாக இருக்கிறது. தொடர்ந்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனை பயன்படுத்தி கொண்ட எடப்பாடி பழனிசாமி, தங்கள் மீதுள்ள எந்த வழக்கிலும் நடவடிக்கை எடுக்க கூடாது, அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் கூட்டணி சேருவேன் என நிபந்தனை விதித்தார். அதன்படி அண்ணாமலையின் தலைவர் பதவி பறிக்கப்பட்டவுடன் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்தார். இதனால் கடும்கோபம் அடைந்த அண்ணாமலை, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்தினார். இவரது ஆலோனையின்படி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணியில் இருந்து வெளியே வந்தனர். இதனால் கோபம் அடைந்த டெல்லி பாஜக, மீண்டும் இருவரையும் உள்ளே கொண்டு வரவேண்டும் என்ற பொறுப்பை அண்ணாமலையிடம் கொடுத்தது.

பாஜகவை பொறுத்தவரையில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்பதில் உறுதியாக உள்ளனர். அன்புமணியும் ஆட்சியில் பங்கு கிடைக்கும் என உறுதியாக கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தனியாகவே நாங்கள் ஆட்சியை அமைப்போம் என்கிறார். ஆனால் தேர்தல் முடிவுக்கு பிறகு வேறுஒருவரை முதல்வர் வேட்பாளராக கொண்டுவந்துவிடலாம் என்ற ரகசிய திட்டத்துடன் பாஜக இருக்கிறது. தற்போது எடப்பாடி பழனிசாமியே கூட்டணிக்கு தலைவர் என டெல்லி பாஜகவும் கூறுகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். அதே நேரத்தில் டிடிவி தினகரனும், அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமியை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கிறார்கள். இந்த திட்டத்தை தினகரனிடம் அண்ணாமலை கூறியுள்ளார். இதையடுத்ேத டிடிவி தினகரன் நேற்று பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Related Stories: