மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

சேலம், ஜன.22: தொழிலாளர் நலத்துறையில் உதவித்தொகை பெறும் மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என உதவி ஆணையர் சங்கீதா தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர் கல்வி உதவித்தொகை பெறுவோரின் குழந்தைகளுக்கு, தமிழ்நாடு கட்டுமானக்கழகம் மூலம் 40 பயிற்சி பிரிவுகளில் இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2025-2026ம் கல்வியாண்டில் முறையான பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. படிப்போர், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் உயர் கல்வி பயில்வதற்காக உதவித்தொகை பெற்றிருத்தல் வேண்டும். இல்லையேல், உதவித்தொகை பெற விண்ணப்பித்திருக்க வேண்டும். பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் இரு குழந்தைகள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் உயர் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளியுடன், அனைத்து அசல் ஆவணங்களுடன் சேலம் கோரிமேட்டில் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகிலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அலுவலகத்திற்கு நேரில் வந்து, பயிற்சிக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பித்து, இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: