×

கிரீன்லாந்தை வாங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10% வரிவிதிப்பு: அமெரிக்கா அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்: கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எட்டு ஐரோப்பிய நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். கனிம வளங்கள் நிறைந்த கிரீன்லாந்து தீவை ரஷ்யா மற்றும் சீனா ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளதால், அதை வாங்குவது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அவசியம் என அதிபர் டிரம்ப் கூறி வந்தார். ஆனால், ‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ என டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

இந்நிலையில், கிரீன்லாந்தில் சில ஐரோப்பிய நாடுகள் ராணுவ படைகளை குவித்துள்ளதாக குற்றம்சாட்டிய டிரம்ப், இது உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும், மிகவும் ஆபத்தான விளையாட்டு என்றும் விமர்சித்திருந்தார். இந்தச் சூழலில், கிரீன்லாந்தை வாங்கும் தனது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய 8 ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என நேற்று டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்த வரி விதிப்பு வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், கிரீன்லாந்தை முழுமையாக வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், வரும் ஜூன் 1ம் தேதி முதல் இந்த வரி 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ‘டிரம்பின் இந்த அறிவிப்பு முற்றிலும் தவறானது’ என்று சாடியுள்ளார்.

மேலும் டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர், ‘அமெரிக்காவின் அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று கூறியுள்ள நிலையில், கோபன்ஹேகன் மற்றும் நூக் நகரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கோபன்ஹேகன் சென்று, கிரீன்லாந்தை வாங்கும் முடிவை பலர் ஆதரிக்கவில்லை என ஆறுதல் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த டிசம்பர் 28ம் தேதி தொடங்கிய போராட்டம் கலவரமாக மாறியதில், இணைய சேவை துண்டிக்கப்பட்ட போதிலும் 3,000 முதல் 12,000 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை கையாண்டதற்காக தேசிய பாதுகாப்பு தலைவர் அலி லாரிஜானி உட்பட 18 பேர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.

இதற்கிடையில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி, உயிரிழப்புகளுக்கு டிரம்ப்தான் காரணம் என்றும், அவர் ஒரு குற்றவாளி என்றும் தொலைக்காட்சியில் குற்றம் சாட்டியிருந்தார். கத்தார், ஓமன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் போரைத் தவிர்க்க சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வந்த சூழலில், 800 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு டிரம்ப் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஈரானில் கடந்த 37 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘ஈரானில் புதிய தலைமையை தேடுவதற்கான நேரம் வந்துவிட்டது’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கமேனியை ‘நோயாளி மனிதர்’ என்று விமர்சித்துள்ள டிரம்ப், ‘ஆயிரக்கணக்கான மக்களை கொல்வதை விட்டுவிட்டு நாட்டை சரியாக வழிநடத்துவதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்’ என்று சாடியுள்ளார். மேலும் ‘ஈரான் ஆட்சியாளர்கள் வன்முறையை பயன்படுத்தி நாட்டை முழுமையாக அழித்து வருகின்றனர்’ என்றும், அமெரிக்கா ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

Tags : Greenland ,US ,President ,Trump ,Washington ,Russia ,China ,
× RELATED கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான...