×

சென்னை விமானநிலையத்தில் குடியரசு தினத்தையொட்டி 5 அடுக்கு கூடுதல் பாதுகாப்பு: மோப்பநாயுடன் தீவிர சோதனை

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு முதல் 5 அடுக்கு கூடுதல் பாதுகாப்பு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இப்பாதுகாப்பு வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். இதையடுத்து பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனையை முன்னிட்டு முன்னதாகவே விமானநிலையத்துக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் அனைத்து ரயில், விமான நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதேபோல், சென்னை விமானநிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் 5 அடுக்கு கூடுதல் பாதுகாப்பு முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இப்பாதுகாப்பு வரும் 30ம் தேதிவரை அமலில் இருக்கும். இதில் உச்சக்கட்ட பாதுகாப்பாக, வரும் 24, 25, 26 ஆகிய 3 தேதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்படுகிறது என்று பாதுகாப்பு படை தரப்பில் கூறுகின்றனர்.

இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்துக்கு நேற்று நள்ளிரவு முதல் வரும் அனைத்து வாகனங்களையும் நுழைவு பகுதியில் நிறுத்தி, சந்தேகப்படும் வாகனங்களை மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு படையினா் சோதனையிடுகின்றனா். அதேபோல், விமான நிலையத்தின் ஓடுபாதை உள்பட பல்வேறு இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் பரிசோதித்து வருகின்றனர். விமானநிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.
மேலும், விமானநிலைய மல்டிலெவல் காா் பாா்க்கிங்கில் நீண்ட நேரமாக நிற்கும் காா், பைக் போன்ற வாகனங்களை வெடிகுண்டு நிபுணா்கள் தீவிரமாக சோதனையிட்டு கண்காணிக்கின்றனர். அதேபோல், சென்னை விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக, விமானங்கள் நிற்கும் பகுதிகளிலும் மோப்ப நாய்களுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிரடி வீரர்கள் தீவிர சோதனை கண்காணிக்கின்றனர். மேலும், விமான நிலையத்தில் சிறப்பு பாஸ்கள் வழங்குவதில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

விமானநிலைய எரிபொருள் நிரப்புமிடம் பகுதியில் கூடுதல் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக விமானநிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு வழக்கமான சோதனைகளுடன், விமானங்களுக்குள் உள்ளே செல்லும் இடத்தில் மேலும் ஒருமுறை பயணிகள் சோதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பயணிகளின் கைப்பைகள் சோதிக்கப்படுகின்றன. அவற்றில் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்றவற்றை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் விமானங்களில் சரக்கு, பார்சல்கள் ஏற்றும் இடங்களிலும் கண்காணித்து, அவற்றை பலமுறை பரிசோதனைக்கு பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கப்படுகிறது.

சென்னை விமானநிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் பயணிகளுக்கு கூடுதல் சோதனை நடத்தப்படுவதால், அனைத்து உள்நாட்டு பயணிகளும் ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், பன்னாட்டு பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாகவும் வரவேண்டும் என்று விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டாலும், அனைத்து விமானங்களும் வழக்கம் போல் இயங்குகின்றன. எனவே, அனைத்து பயணிகளும் அச்சமின்றி வழக்கம் போல் விமானங்களில் பயணம் மேற்கொள்ளலாம் என்று விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

Tags : Republic Daily ,Chennai Airport ,Mopdog ,Republic Day ,
× RELATED நிரந்தர உறுப்பினராக ரூ.8,400 கோடி கட்டணம்;...