மகாராஷ்டிராவில் 25 மாநகராட்சிகளை கைப்பற்றியது பாஜ

 

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, நவி மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் படி, கடந்த வியாழக்கிழமை அனைத்து மாநகரங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மும்பையில் 52.94 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, நேற்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

காலை முதலே மும்பையில் பாஜ-சிவசேனா கூட்டணி முன்னிலை வகித்தது. மும்பை மட்டுமல்லாது புனே, தானே, நாக்பூர் போன்ற பிற மாநகரங்களிலும் பாஜ கூட்டணியே முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவில் 227 வார்டுகளைக் கொண்ட மும்பை மாநகராட்சியில் ஆளும் பாஜ – சிவசேனா கூட்டணி 110க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மும்பை மாநகராட்சியை கைப்பற்றியது.

ஆளுங்கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட உத்தவ் சிவசேனா- எம்என்எஸ் கூட்டணி 82 இடங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தை பிடித்தது. காங்கிரஸ் மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி 23 இடங்களை கைப்பற்றின. கட்சிகள் வாரியாக பாஜ 84 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. உத்தவ் கட்சி 72, சிவசேனா 26, காங்கிரஸ் 23, எம்என்எஸ் 10, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 2, சரத்பவார் கட்சி 1, இதர கட்சிகள் 9 இடங்களை பிடித்தன.

மும்பை மாநகராட்சி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பிளவுபடாத சிவசேனா கட்சியின் வசம் இருந்தது. 1997 முதல் சிவசேனாவைச் சேர்ந்தவர்களே மேயராக இருந்து வந்தனர். இந்த நிலையில், மும்பை மாநகராட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி கட்சிகளான பாஜவும் சிவசேனாவும் இணைந்து போட்டியிட்டன. இதை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியும் ராஜ்தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் களமிறங்கின. காங்கிரஸ் கட்சி, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இவர்களுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், தேர்தல் முடிவில் ஆளும் பாஜ – சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. புனேவிலும் இதே நிலை தான். புனே மாநகரம் பவார் குடும்பத்தின் கோட்டையாக கருதப்படுகிறது. 2023ல் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டதை அடுத்து, சரத்பவாரும் அஜித்பவாரும் தனித்தனியாக பிரிந்தனர். ஆயினும் புனே மாநகராட்சி தேர்தலுக்காக, இரு தலைவர்களும் ஒன்று சேர்ந்தனர். தேசியவாத காங்கிரசின் இரு அணிகளும் புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வட்டில் கூட்டணி வைத்து போட்டியிட்டன. ஆனால் இவர்களது கூட்டணி பலன் அளிக்கவில்லை.

தேர்தல் முடிவில் பவார் கோட்டை தகர்ந்துவிட்டது. 165 வார்டுகளைக் கொண்ட புனேவில் 120க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பாஜ அபார வெற்றி பெற்றுள்ளது. சரத்பவார் – அஜித்பவார் கூட்டணிகள் 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன. இதே போல நவிமும்பை உட்பட 25 மாநகராட்சிகளை கைப்பற்றி இருப்பதாக பாஜ தலைவரும் முதல்வருமான பட்நவிஸ் பெருமிதம் தெரிவித்தார்.

Related Stories: