*தஞ்சாவூரில் அறுவடை பணி மும்முரம்
திருவிடைமருதூர் : தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தப் பொங்கல் திருநாளில் மண்பானை, செங்கரும்பு என வெவ்வேறு சிறப்புகள் இருந்து வந்தாலும் மண் பானைகளுக்கு கட்டப்படும் இஞ்சி கொத்து மற்றும் மஞ்சள் கொத்து உள்ளிட்டவைகளும் சிறப்பானதாகும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீராக்கண்ணு, திருவாய்ப்பாடி, ஆடுதுறை, திருச்சேறை, கதிராமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் மேல் இஞ்சி மற்றும் மஞ்சள் விவசாயம் அறுவடை நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையின் போது பானையை அலங்கரிக்க மஞ்சள் கொத்துடன் இஞ்சி கொத்து கட்டுவது, மங்களம், செழுமை, ஆரோக்கியம், மற்றும் இயற்கையுடனான பிணைப்பைக் குறிக்கிறது. இஞ்சி செரிமானத்திற்கும், மஞ்சள் மகாலட்சுமியின் அம்சமாகவும் கருதப்படுகிறது, இவை அனைத்தும் புதிய அறுவடைத் திருநாளான பொங்கலில் நல்ல எதிர்காலத்தையும், செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.
வேளாண் தொழிலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அறுவடை செய்த கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து ஆகியவற்றுடன் பொங்கலிடுவது வழக்கம். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளான திருப்பனந்தாள், வீராகண், கடம்பங்குடி, திருவாய்ப்பாடி, அய்யாநல்லூர், பந்தநல்லூர், கதிராமங்கலம், ஆடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இந்த அறுவடை பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், இஞ்சி மஞ்சள் உள்ளிட்ட விவசாய பணிகள் மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்கள் இருந்து வருவதாகவும், தற்போது தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் இனிவரும் காலங்களில் செங்கரும்பு வழங்குவது போல் ஆரோக்கியத்தை செல்வத்தை பெருக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும்.
இஞ்சி, மஞ்சள் கொத்து வகைகளையும் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் இதனை நேரடியாக விவசாயிகளிடமிருந்து உரிய விலைக்கு அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக பயிரிடப்படும் இஞ்சி, மஞ்சள் பயிர்களுக்கு அரசு முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டு வெள்ளம், செங்கரும்பு, மண்பானை என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் ஒரு புறம் இருந்து வந்தாலும், இதுபோன்று பொங்கல் பானையை அலங்கரிக்க கூடிய வகையில் உள்ள ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் பெருக்கக் கூடிய வகையில் இஞ்சி மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலை இனி மாற வேண்டும் தை பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
இஞ்சி, மஞ்சள் கொத்து ஜோடி ரூ.100க்கு விற்பனை
தஞ்சை சிவகங்கை பூங்கா, கீழவாசல், நாஞ்சிக்கோட்டை சாலை, ஈபி காலனி, பழைய பஸ் நிலையம், காமராஜர் காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஞ்சி, மஞ்சள் கொத்து போன்றவை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஜோடி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

