அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்

வாஷிங்டன்: ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் வர்த்தகத்திற்கு கூடுதலாக 25 சதவீத வரியை செலுத்த வேண்டும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஈரானில் பொருளாதாரம், கரன்சி மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் தலைமைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் வெடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நடக்கும் இப்போராட்டத்தில் இதுவரை 650 பேர் பலியாகி உள்ளனர்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைதியாக போராடும் மக்களை ஒடுக்க முயற்சித்தால், ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார். இது ஏற்கனவே விரிசலடைந்த ஈரான், அமெரிக்கா இடையே உறவை மேலும் சீர்குலைத்துள்ளது.

தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டால், அமெரிக்கா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் உச்ச தலைவர் கமேனி பதிலடி கொடுத்துள்ளார். இந்த சூழலில், ஈரானின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அவர் தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில், ‘‘ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத கூடுதல்வரி செலுத்த வேண்டும்.

இந்த உத்தரவு இறுதியானது, முடிவானது. உடனடியாக அமலுக்கு வருகிறது’’ என அறிவித்துள்ளார். இது ஈரானின் நிலைமையை மோசமாக்குவதுடன், ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளான இந்தியா, சீனா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஆர்மீனியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
குறிப்பாக, சமீபத்திய ஆண்டுகளில் ஈரானின் 5 பெரிய வர்த்தக பங்களாில் ஒன்றாக இருந்து வரும் இந்தியாவுக்கு டிரம்பின் அறிவிப்பு பெரும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏற்கனவே, ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு கூடுதல் 25 சதவீத வரி உட்பட 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. தற்போது ஈரானுடனான வர்த்தகத்திற்காக கூடுதல் 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தால் இந்திய இறக்குமதி பொருட்கள் மீதான வரி 75 சதவீதமாக அதிகரிக்கும். இது அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும்.

ஈரானுக்கு இந்தியா அரிசி, தேநீர், சர்க்கரை, மருந்துகள், செயற்கை இழைகள், மின் இயந்திரங்கள், செயற்கை நகைகளை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது. அதே போல ஈரானில் இருந்து இந்தியா உலர் பழங்கள், கனிம, கரிம ரசாயனங்கள், கண்ணாடி பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது.

அமெரிக்காவால் எதிர்ப்பால் இந்த வர்த்தகத்தை இந்தியா நிறுத்தினாலும் உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கே பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவும் ஈரானும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான உறவுகளை கொண்டிருப்பதாக ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் கூறி உள்ளது.

* சபஹார் துறைமுகம் கதி
இந்தியா, ஈரான் உறவின் முக்கிய அம்சமாக சபஹார் துறைமுகம் திகழ்கிறது. ஈரானின் தெற்கு கடற்கரையில் உள்ள சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள சபஹார் துறைமுகம், இணைப்பு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்தியாவாலும் ஈரானாலும் கூட்டாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2015 மே மாதம் இந்தியா-ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து, 2016 மே மாதத்தில் இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே சர்வதேச போக்குவரத்து மற்றும் சரக்கு வழித்தடத்தை நிறுவுவதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த ஆண்டு, சபஹார் துறைமுகத்தின் ஷாஹித் பெஹெஷ்டி முனையத்திற்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்கும், அதனை இயக்குவதற்கும் ஈரானுடன் இந்தியா 10 ஆண்டுகால ஒப்பந்தம் செய்தது. தற்போது இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் கேள்விக்குறியாகி உள்ளன.

* இந்திய பாஸ்மதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு
ஈரானில் நிலவும் உள்நாட்டு வன்முறையில், அந்நாட்டிற்கான இந்தியாவின் பாஸ்மதி அரிசி கடுமையாக பாதிக்கத் தொடங்கி உள்ளது. ஏற்றுமதியாளர்கள் பணம் பெறுவதில் தாமதங்களையும், அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைகளையும் எதிர்கொள்வதால், உள்நாட்டு விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளன என்று இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2025-26ம் நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பர் மாதங்களில் இந்தியா ஈரானுக்கு ரூ.4 ஆயிரம் கோடி மதிப்புள்ள பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மொத்த அளவு 5.99 லட்சம் டன். இந்தியாவின் பாஸ்மதி அரிசியின் முக்கிய ஏற்றுமதி மையமாக ஈரான் உள்ளது. ஈரான் சந்தையில் ஏற்பட்ட வர்த்தக பாதிப்பால் இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் முக்கிய பாஸ்மதி வகைகளின் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளன.

* ஈரான் பலி எண்ணிக்கை 2000 ஆனது
ஈரானில் நாடு தழுவிய போராட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 2,000 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு இரண்டு வாரங்களுக்கும் மேலாக நடக்கும் போராட்டங்களில் இறந்தவர்களில் 1,847 பேர் போராட்டக்காரர்கள் என்றும், 135 பேர் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள். மேலும் 9 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

* எவ்வளவு வர்த்தகம்?
கடந்த 2023ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஈரானுக்கான ஏற்றுமதியின் மொத்த மதிப்பு 1.19 பில்லியன் டாலர் (ரூ.10,710 கோடி). ஈரானில் இருந்து இந்தியா மேற்கொள்ளும் இறக்குமதியின் மொத்த மதிப்பு 1.02 பில்லியன் டாலர் (ரூ.9,000 கோடி). 2023ம் ஆண்டில், இந்தியாவிலிருந்து ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கியப் பொருட்கள் அரிசி (ரூ.6,000 கோடி), சோயாபீன் மாவு (ரூ.850 கோடி) மற்றும் வாழைப்பழங்கள் (ரூ.450 கோடி). கடந்த 2025ம் ஆண்டில் முதல் 10 மாதங்களில் இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் ரூ.12,000 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

* கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
ஈரானில் நிலவும் பதட்டங்களால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடங்கல்கள் குறித்த அச்சங்கள் அதிகரிக்கும் நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை, கடந்த ஆண்டு நவம்பருக்குப் பிறகு இல்லாத உச்சத்தை எட்டியுள்ளன.

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்சிஎக்ஸ்) கச்சா எண்ணெய் விலை 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. எம்சிஎக்ஸ் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு ரூ.5,414 ஆக (1.48%) உயர்ந்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.78% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு ரூ.5,793 ஆகவும், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் 0.84% உயர்ந்து ரூ.5,400 ஆகவும் உயர்ந்துள்ளன.

* ஈரானின் முக்கிய வர்த்தக நாடுகள்
சீனா, இந்தியா, துருக்கி, ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான்
இதில் முதலிடத்தில் உள்ள சீனாவுக்கு கடந்த 2022ல் ஈரான் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. சீனாவில் இருந்து ரூ.1.30 லட்சம் கோடி பொருட்கள் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஈரானின் ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் 80 சதவீதத்தை சீனா வாங்குகிறது.

Related Stories: