பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி, முருக்கம்பாடி ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் கேசவன் (52). இவரது மனைவி மாதி (50). கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கேசவன் மனைவியை அடித்துள்ளார். இதில் மாதி, உயிரிழந்தார்.
இதுதெரியாமல் மனைவி பிணத்துடனேயே கேசவன் தூங்கினார். நேற்று அதிகாலை போதை தெளிந்து எழுந்து பார்த்தபோது மனைவி உயிரிழந்தது தெரியவந்தது. மனைவியை அடித்துக்கொன்றதில் அதிர்ச்சியடைந்த கேசவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
