லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை உலகின் மிக மோசமான மனிதர் என்று ஹாலிவுட் நடிகர் மார்க் ருஃப்பலோ கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகர் மார்க் ருஃப்பலோ கலந்து கொண்டார். மினியாபோலிஸ் நகரில் ரெனி நிக்கோல் குட் என்ற பெண் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரும் மற்ற நடிகர்களும் ‘பீ குட்’ என்ற வாசகம் அடங்கிய வில்லைகளை அணிந்து வந்திருந்தனர்.
வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா எடுத்து வரும் போர் நடவடிக்கைகள் மற்றும் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக ‘நோ கிங்ஸ்’ என்ற இயக்கத்தின் மூலம் ருஃப்பலோ தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் பேசிய மார்க் ருஃப்பலோ, அதிபர் டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், ‘டொனால்ட் டிரம்ப் உலகின் மிக மோசமான மனிதர் ஆவார்.
உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டின் அதிகாரத்தை இவரைப் போன்ற ஒருவரிடம் ஒப்படைத்திருப்பது ஆபத்தானது. இவர் பாலியல் பலாத்கார குற்றவாளி மற்றும் தண்டனை பெற்ற நபர் ஆவார். வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது’ என்று விமர்சித்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சியுங், ‘மார்க் ருஃப்பலோ சினிமா தொழிலில் மோசமான நடிகர் என்பதுடன், பொய்களைப் பரப்பும் மோசமான மனிதராகவும் இருக்கிறார்’ என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
