இளசுகளை ஆட்டிப்படைக்கும் ‘லைக்ஸ்’ மோகம்; 32% பேர் உயிரை பணயம் வைத்து ரீல்ஸ் உருவாக்கும் அபாயம்

 

* மனநலத்தையும் சிதைக்கிறது
* ஆய்வுகளில் அதிர்ச்சி

ஆன்ட்ராய்டு யுகத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக உள்ளது. இதில் இளைஞர்களை பொறுத்தவரை அவர்களின் அடையாளம், திறமை, சமூகபங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாகவும் மாறிநிற்கிறது. இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ‘ரீல்ஸ்’. இசை, உரையாடல், வசனம், பாடல் போன்றவற்றின் காட்சி தொகுப்பாக ரீல்ஸ் உருவாக்கப்படுகிறது. இந்த வகையில் 15-90 விநாடிகளுக்கு உருவாக்கப்படும் ரீல்ஸ் என்பது உளவியல் நுட்பமாக ெபரும்பாலான மக்களை அடிமையாக்கி வைத்துள்ளது. உலகளவில் ரீல்ஸ் மோகம் உள்ளது. ஆனாலும் இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டோரில் 78 சதவீதம் பேர், தினமும் ஒரு முறையாவது ரீல்ஸ் பார்ப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், பொழுதுபோக்கில் ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் தினசரி 1.30 மணி முதல் 2 மணி வரை ரீல்ஸ் காணொளியில் செலவிடுகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அதேநேரத்தில் காணொளிகளை வெளியிட்டு லைக்ஸ், கமென்ட்ஸ், ஷேரிங் பெறுவதற்காக 68 சதவீதம் பேர், ஆபத்தான காரணிகளில் ஈடுபடுகின்றனர். 57 சதவீதம் பேர், சட்டத்திட்டங்களை உணராமல் விபரீத காணொலிகளை உருவாக்குகின்றனர். 32 சதவீதம் பேர் உயிரை பணயம் வைத்து கூட ரீல்ஸ் காணொலிகளை உருவாக்கும் செயலில் ஈடுபடுகின்றனர் என்றும் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரீல்ஸ் மோகம் என்பது எதிர்மறை விளைவுகளையே அதிகம் ஏற்படுத்துகிறது. குறிப்பாக ரீல்ஸ் என்பது உருவாக்குவோருக்கு கடும் மனஅழுத்தத்தையும், பார்ப்போருக்கு வேலையிலும், கல்வியிலும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. ரீல்ஸ் ஆர்வலர்களில் 68சதவீதம் பேர், இந்தநிலைக்கு ஆளாகியுள்ளனர் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக மேம்பாடு சார்ந்த உளவியல் நிபுணர்கள் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்புவரை பிரபல சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களை ஆதர்ஷநாயகர்களாக கருதி இளைஞர்கள் கொண்டாடினர். இப்போதய ரீல்ஸ் யுகம், அவர்கள் ஒவ்வொருவரையும் ஹீரோக்கள் போல மாற்றி வைத்துள்ளது. இதனால் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மீதான ஈர்ப்பு பெருமளவில் குறைந்து வருகிறது. அவர்களே இசை, பாடல், தனித்திறன்களை காணொலியாக வெளியிட்டு பிறரின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இதனை நட்சத்திரங்கள் சிலரும் செய்து வருகின்றனர். இது ஆரோக்கியமான விஷயம் தான். ஆனால் தன்னை ஹீரோவாக சித்தரித்து வெளியிடும் ரீல்ஸ்சுக்கு அதிகளவில் ‘லைக்’ கிடைக்க வேண்டும், ஏராளமானோர் தங்களை பின்தொடர வேண்டும் என்ற சிந்தனையே, பிரதானமாக இருக்கிறது. இதனால் அளவுக்கதிமான ரீல்ஸ்களை பதிவு செய்யவேண்டும்.

அது மற்றவர்களை விட, மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். ஆர்ப்பரிக்கும் அலையில் புரள்வது, ஓடும் ரயில் முன்பு குதிப்பது, நடுரோட்டில் பஸ்சை மடக்கி கெத்து காட்டுவது போன்ற விபரீதங்களில் ஈடுபட்டு காணொலி எடுப்பதற்கும் இதுவே முக்கிய காரணம். இதை தன்னம்பிக்கையற்ற அங்கீகார உணர்வு என்றே கூறவேண்டும். இதுபோன்ற ரீல்ஸ்களுக்கு உரிய பார்வையாளரின் அங்கீகாரம் கிடைக்காவிட்டால் மூளைக்கு மகிழ்ச்சி தரும் ‘டோப்ேபாமைன்’ விளைவு வெகுவாக பாதிக்கப்படுகிறது. இது மனநல பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான சிலர், தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் கடந்த ஆண்டுகளில் நடந்துள்ளது. இதேபோல் கல்வி, குடும்ப பிரச்னைகளுக்கு மாற்றாக ரீல்ஸ் பார்க்கும் மனநிலையும் பலரிடம் இருக்கிறது. இது அந்த நேரத்திற்கு மட்டுமே ஒரு ஆறுதலை தரும் என்பதை அவர்கள் உணரவேண்டும்.

மாணவர்களும், தொழிலாளர்களும் ரீல்ஸ் பார்க்கும் ஆர்வத்தில் அதிகநேரம் செலவிடுவது தொடர்கிறது. இது அவர்களின் கல்வியையும், தொழிலையும் வெகுவாக பாதிக்கிறது. மொத்தத்தில் தனிப்பட்ட மனிதன், தன்னைத்தானே ஒரு திறமையாளராக உருவாக்கும் வாய்ப்புகள் ரீல்ஸ் போன்ற செயலிகளுக்கு 80 சதவீதம் உள்ளது. அதேநேரத்தில் அதற்கு அடிமையானவர்களின் வாழ்க்கை பயணத்தை சிதைத்து விடும் அபாயமும் 100 சதவீதம் அதில் பொதிந்து கிடக்கிறது. எனவே சமூகவலைதளங்களால் ஈர்க்கப்பட்டு, அதில் மூழ்கி கிடக்கும் அனைவரும் நடப்பாண்டில் இதை உணர்ந்து பயணிக்க வேண்டியது மிகவும் அவசியம். இவ்வாறு உளவியல் நிபுணர்கள் கூறினர்.

ெசயல் திறனை முடக்கி விடுகிறது
‘அட்டென்ஷன் டிபிக்ட் ஹைபர் ஆக்டிவிட்டி டிசார்டர்’ என்று சொல்லக் கூடிய குறைபாட்டிற்கான அறிகுறிகள் குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது. சரியாக திட்டமிட்டு செயலாற்ற முடியாத பிரச்னையாக இது உள்ளது. சமீபகாலமாக இதுபோன்ற பாதிப்புகள் குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும் ஷார்ட்ஸ், ரீல்ஸ் வீடியோக்களை அதிகமாக பார்ப்பவர்களிடம் காணப்படுகிறது என்பதும் ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. எனவே, குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது அதிகமாக ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ்களை பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டாம். இதே நிலை பெரியவர்களுக்கும் பொருந்தும். எனவே, இவற்றை பார்ப்பதற்கு குறைவான அளவு நேரம் ஒதுக்கலாம்,’’ என்பதும் மருத்துவர்கள் வழங்கியுள்ள அறிவுரை.

விழித்திரைகளில் மட்டுமே நிறையும்
ராணுவ வீரர்களின் தீரமும், மருத்துவ வல்லுநர்களின் துணிச்சலும், திறன்வாய்ந்த கலைஞர்களின் தொழில்நேர்த்தியும், விஞ்ஞானிகளின் அரியகண்டுபிடிப்புகளும், மெய்ஞானம் தரும் எழுத்தாளர்களின் உயர்ந்த படைப்புகளும், பல்துறை வல்லுநர்களின் பயிற்சியோடு சார்ந்த முயற்சிகளும் காலம் கடந்தும் ேபாற்றப்படும். இது போன்றவர்களை முன்மாதிரியாக கொண்டு எதார்த்த வாழ்வில் சாதனைகள் படைக்க இளைஞர்கள் முன்வரவேண்டும். அப்போது தான் வரலாறு படைக்க முடியும். மற்றபடி தற்போது நம்மை ெபரும் மோகத்தில் ஆழ்த்தி வைத்திருக்கும் ரீல்ஸ்போன்ற வேடிக்கை காட்சிகள் விழித்திரைகளை மட்டுமே கடந்து செல்லும். அது மனத்திரைகளில் எப்போதும் நிரந்தரமாக நிறைந்து நிற்காது. இதை ரீல்ஸ் பிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டியது முழுமுதற்கடமையாகும் என்கின்றனர் மூத்தஅறிஞர்கள்.

மாதத்திற்கு 36.29 கோடி பார்வைகள்
சமூகவலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடுவது தற்போது உச்சத்திற்கு சென்றுவிட்டது. ரீல்ஸ்களுக்கு பாதை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இன்ஸ்டாகிராமில் மட்டும் 41.4கோடி இந்தியர்கள் கணக்கு வைத்துள்ளனர். இதேபோல் ரீல்சை கொண்டிருக்கும் பேஸ்புக்கில் 37.8கோடி இந்தியர்கள் கணக்கு வைத்துள்ளனர். ரீல்சை பயன்படுத்துவோரில் 10முதல் 24வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் உள்ளனர். ரீல்சை பார்ப்பதிலும் இந்தியர்கள் முன்னிலையில் உள்ளனர். மாதத்துக்கு சராசரியாக 36.29கோடி இந்தியர்கள் ரீல்சை பார்க்கின்றனர் என்பது போன்ற தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

மதுவை விட தீமையானது
அதிகநேரம் ரீல்ஸ் பார்ப்பது மது அருந்துவதை விட, 5மடங்கு தீமையை ஏற்படுத்தும். மது அருந்துவதால் முதலில் உடல்நலம் பாதிக்கிறது. பின்னர் அதற்கு அடிமையானால் மனநலமும் பாதிக்கிறது. ஆனால் ரீல்ஸ் அதிகநேரம் பார்ப்பதால் தூக்கம், மனஆரோக்கியம், மனச்சோர்வு, அறிவாற்றல் குறைபாடு, நினைவாற்றலில் பிரச்னை என்று பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. இந்தவகையில் மதுஅருந்துவதை விட ரீல்ஸ் மோகம் என்பது மனிதர்களுக்கு அபத்தமானது என்று ஆய்வுகள் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: