×

உணவே இரைப்பை குடல் புற்றுநோய்க்கு

நன்றி குங்குமம் டாக்டர்

புற்றுநோய் மருத்துவர் அஷு அபிஷேக்

முக்கிய காரணம்!

அதிகரித்து வரும் இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்புக்கு உணவே முக்கிய காரணமாகிறது. எனவே நாம் எதை உண்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் உணவில் உள்ள புற்றுநோய் காரணிகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை, மூத்த ஆலோசகர் – மருத்துவர் அஷு அபிஷேக்.

உணவு ஒரு பகுதியின் புவியியல் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதோடு, அது நோய் உருவாகும் முறையையும், பாங்குகளையும் தீர்மானிக்கிறது. இந்தியா முழுவதும், இரைப்பை குடல் (செரிமான மண்டலம்) மற்றும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன; இதில் உணவுமுறை அமைதியான, அதேசமயம் வலுவான பங்கைக் கொண்டுள்ளது. முக்கியமாக, புற்றுநோய் ஆபத்து என்பது, கலாச்சாரம் சார்ந்த உணவுப் பழக்கங்களால் மட்டும் ஏற்படுவதில்லை; பிராந்திய அளவிலான உணவு முறைகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கின்ற போதிலும், நாம் எதைச் சாப்பிடுகிறோம், எவ்வளவு அடிக்கடிச் சாப்பிடுகிறோம் மற்றும் எப்படிச் சமைக்கிறோம் என்பதன் மூலமே புற்றுநோய்க்கான இடர் வாய்ப்பு பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது.

உணவில் உள்ள புற்றுநோய் காரணிகள்

உணவில் இருக்கின்ற அல்லது சமைக்கும்போது, பதப்படுத்தும்போது அல்லது சேமித்து வைக்கும்போது உருவாகும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களே ‘உணவுமுறை புற்றுநோய் காரணிகள்’ எனப்படுகின்றன. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் ‘நைட்ரோசமைன்கள்’ உள்ளன. அதேபோல் நெருப்பில் வாட்டுவது, புகையில் வாட்டுவது அல்லது அதிக வெப்பத்தில் எண்ணெயில் பொரித்தல் போன்ற சமையல் முறைகள் ‘பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள்’ (PAHs) மற்றும் ‘ஹெட்டோரோசைக்ளிக் அமைன்களை’ (HCAs) உருவாக்குகின்றன. இவை அனைத்தும் இரைப்பை குடல் புற்றுநோயுடன் தொடர்புடையவையாக அறியப்பட்டுள்ளன.

வெப்பமான, ஈரப்பதம் மிக்க காலநிலைகளில் தானியங்கள், நிலக்கடலை மற்றும் மசாலாப் பொருட்களைச் சரியாகச் சேமிக்காதபோது ‘அஃப்லாடாக்சின்’ (aflatoxin) நச்சு அவற்றில் உருவாகக்கூடும். குறிப்பாக ஹெபடைடிஸ் B அல்லது C தொற்றுடன் இது இணையும்போது கல்லீரல் புற்றுநோய்க்கு ஒரு முக்கிய காரணமாக இது மாறுகிறது.

தென்னிந்திய மற்றும் பிற இந்திய உணவுமுறைகள்: முக்கிய வேறுபாடுகள்

தென்னிந்திய உணவுமுறை, பாரம்பரியமாக அரிசி, பருப்பு வகைகள், நொதித்தல் முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் (இட்லி, தோசை), காய்கறிகள், தேங்காய் மற்றும் மீன் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.இந்தியாவின் பிற பகுதிகளில் பெரும்பான்மையான உணவு முறைகள் கோதுமையை அடிப்படையாகக் கொண்டவை; இவற்றில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், சிவப்பு இறைச்சி(சில பிராந்தியங்களில்), மைதா மற்றும் நெய் அல்லது வெண்ணெயில் சமைக்கப்பட்ட குழம்பு வகைகளும், பதார்த்தங்களும் அதிகம் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. இவற்றில் எதையும் இயல்பாகவே ‘நல்லது’ அல்லது ‘கெட்டது’ என்று கூற முடியாது. ஆனால், ஒவ்வொன்றிலும் புற்றுநோயுடன் தொடர்பான சாதகமான அம்சங்களும், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மோசமான அம்சங்களும் உள்ளன.

தென்னிந்திய உணவின் நன்மைகள்

நொதிக்க வைக்கப்பட்ட உணவு தயாரிப்புகள்: இட்லி, தோசை போன்றவை குடல் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நச்சு நீக்கத்திற்கும், வீக்கம், அழற்சியை குறைக்கவும் உதவுகின்றன.

அதிக நார்சத்து: அதிகப்படியான பருப்பு மற்றும் காய்கறி பயன்பாடு, நார்சத்து மற்றும் ஆக்சிஜனேற்றிகளை வழங்கி குடல் புற்றுநோய் வரும் இடர்வாய்ப்பைக் குறைக்கிறது.
மசாலாப் பொருட்கள்: மஞ்சள், கறிவேப்பிலை, கடுகு மற்றும் பூண்டு போன்ற நறுமணப் பொருட்கள் புற்றுநோய்க்கு எதிரான செயல்படும் பண்புகளைக் கொண்டுள்ளன.

இந்தக் காரணிகள், பாரம்பரிய தென்னிந்திய உணவுமுறைகள் வரலாற்று ரீதியாக இரைப்பை குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைவாக எப்படி கொண்டிருந்தன என்பதை ஓரளவுக்கு விளக்குகின்றன. அதே சமயம், தென்னிந்திய உணவுப் பழக்கவழக்கங்களில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என்பது திரும்பத் திரும்ப அதிக எண்ணெயில் பொரித்து தயாரிப்பது (வடை, பஜ்ஜி, சிப்ஸ்) ‘அக்ரிலாமைடு’ மற்றும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட எண்ணெய் ஆகியவற்றை உருவாக்குகிறது.

அளவுக்கு அதிகமாகத் தீட்டப்பட்ட வெள்ளை அரிசி சாதத்தை அதிக அளவில் உட்கொள்வது, உடல் பருமனுக்கும் மற்றும் கல்லீரல் கொழுப்பு நோய்க்கும் வழிவகுக்கிறது. ஈரப்பதமான சூழலின்போது தானியங்கள் மற்றும் கொட்டைகளை முறையாகச் சேமிக்காதபோது, ‘அஃப்லாடாக்சின்’ எனும் நச்சு வெளிப்பாடு அதிகரிக்கிறது.

எனவே, சாம்பாரோ அல்லது ரசமோ புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை அதிகரிப்பதில்லை. மாறாக, அதிகப்படியான எண்ணெய், மிதமிஞ்சிய உணவு அளவு மற்றும் சமைக்கும்போது பயன்படுத்தப்படும் அதிகப்படியான வெப்பமே புற்றுநோய் ஆபத்திற்கு வழிவகுக்கின்றன.

நகர்ப்புற பாரம்பரியம் அல்லாத மற்றும் மேற்கத்திய உணவுமுறை

பலங்களும் ஆபத்துகளும்

முழு கோதுமை, பருவகால காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் தயிர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வடஇந்திய உணவுகள் ஊட்டச்சத்து ரீதியாக மிகவும் சிறந்தவை; இவை நார்ச்சத்து, நுண்மஉயிரிக்கலவை (புரோபயாடிக்குகள்) மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகியவற்றை வழங்குகின்றன. இருப்பினும், நவீன உணவுமுறை மாற்றங்கள்-குறிப்பாக நகர்ப்புறங்களில் இந்த நன்மைகள் மிகவும் குறைத்துள்ளன.

சுத்திகரிக்கப்பட்ட மாவு (மைதா), வெண்ணெய் நிறைந்த கிரேவி வகைகள், அதிகப்படியான நெய் மற்றும் தணலில் வாட்டி சமைக்கப்படுகின்ற தந்தூரி அல்லது பார்பிக்யூ முறையிலான இறைச்சிகளை அதிகப்படியாக உட்கொள்வது, நைட்ரோசமைன்கள் மற்றும் ஹெட்டோரோசைக்ளிக் அமைன்கள் போன்ற புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்களின் பாதிப்பை அதிகரிக்கின்றன.

இதனுடன் மேற்கத்திய பாணி சார்ந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளான பர்கர்கள், பீட்சாக்கள், சாசேஜ்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் அதிக சர்க்கரையுள்ள பானங்கள் மற்றும் உடனடி உணவுகளின் அதீதப் பயன்பாடும் இணைந்து புற்றுநோய்க்கான ஆபத்தை உயர்த்துகின்றன. இந்த உணவுகளில் பதப்படுத்திகள், உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் ரசாயனக் கலப்புகள் அதிகமுள்ளன.

அளவுக்கதிகமாக பதப்படுத்தப்பட்ட இத்தகைய உணவுகள் உடல் பருமன், கல்லீரல் கொழுப்பு நோய், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நாட்பட்ட குடல் வீக்கம் ஆகியவற்றைத் தூண்டி, பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கின்றன. நகர்ப்புற வாழ்க்கை முறையில் சாதாரணமாகிவிட்ட மதுப்பழக்கம், புற்றுநோய் காரணிகளை உடலில் உறிஞ்சி ரத்தத்தோடு கலப்பதை அதிகரிப்பதோடு, கல்லீரல் செல்களை நேரடியாகச் சேதப்படுத்தி இந்த அபாயத்தை மேலும் தீவிரமாக்குகிறது.

மாற்றத்தை ஏற்படுத்தும் எளிய உணவு மாற்றங்கள்

*எண்ணெயில் பொரித்த வடை, பூரிக்கு பதிலாக ஆவியில் வேகவைத்த இட்லி

*அதிக எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களுக்கு பதிலாக லேசாக வதக்கிய காய்கறிகள்

*புகையில் அல்லது தீயில் வாட்டிய இறைச்சிகளுக்கு பதிலாக புதிதாக வைத்த மீன் குழம்பு

*தீட்டப்பட்ட வெள்ளை அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசி அல்லது சிறுதானியங்கள்

*பூஞ்சை காளான்கள் உருவாக வாய்ப்புள்ள பொருட்களுக்கு பதிலாக முறையாகச் சேமிக்கப்பட்ட கொட்டைகள் மற்றும் தானியங்கள் போன்றவை புற்றுநோய் தடுப்பு உணவுப் பழக்கங்களாகும்.

இவற்றை கைவிட வேண்டிய அவசியமில்லை;. மேலும். மிதமான அளவு உண்பது, புதிதாக சமைத்து உண்பது, நொதிக்க வைத்த உணவுகள் மற்றும் மென்மையான சமையல் முறைகளை பின்பற்றுவது போன்றவை நமது பாரம்பரியமான, விவேகமான செயல்பாட்டிற்கு மீண்டும் திரும்புவதாகும்.

இந்திய உணவுமுறை-தென்னிந்தியாவோ அல்லது வடஇந்தியாவோ-நமது தேர்வுகளைப் பொறுத்தே அது நமக்கு பாதுகாப்பையோ அல்லது பாதிப்பையோ தருகிறது. எனவே நாம் எதை உண்கிறோம் என்பதில் மட்டுமல்ல, நம் உணவை நாம் எவ்வாறு மதிக்கிறோம் என்பதில்தான் வலிமை அடங்கியிருக்கிறது. விழிப்புணர்வுடன் தீங்கு விளைவிக்காதவற்றை தேர்வு செய்து நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளும் நம் நாட்டில் அதிகரித்து வரும் இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்புகளைக் குறைப்பதற்கு உதவும் ஒரு முன்னேற்ற நடவடிக்கையாகும்.

Tags : Dr. ,Cancer ,Ashu Abhishek ,
× RELATED நொச்சி இலையின் மகத்துவம்!