×

அதர்வா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

படத்துக்குப் படம் வெவ்வேறு லுக்கில் வெரைட்டி காட்டினாலும், உடலைக் கன கச்சிதமாக கட்டுகோப்பாக வைத்திருப்பவர் அதர்வா. நடிகர் முரளியின் மகனான அதர்வா பாணா கத்தாடி படத்தின் மூலம் திரையுலகில் நாயகனாக என்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, ஈட்டி என பல வெற்றிப் படங்களை கொடுத்து, சமீபத்தில் வெளியான இதயம்முரளி வரை வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஜொலித்து வருகிறார். தற்போது பொங்கல் ரிலீஸாக இவர் நடித்திருக்கும் பராசக்தி வெளியாக உள்ளது. அதர்வாவின் ஃபிட்னெஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

வொர்க்கவுட்ஸ்: எனக்கு ஃபிட்னெஸில் ஆர்வம் அதிகம். ஜிம் பயிற்சிகள், புல்-அப்கள் (pull-ups) போன்றவற்றைச் செய்து ஃபிட்டாக இருப்பது ரொம்ப பிடித்தமான விஷயம். அப்பா நடிகராக இருந்ததால், அவர் உடற்பயிற்சியில் ஈடுபடும்போதெல்லாம் அவருடன் சேர்ந்து நானும் சிறுவயது முதலே உடற்பயிற்சிகளில் ஈடுபடுவேன். இருந்தாலும், உடற்பயிற்சி மீது தீவிர ஈடுபாடு ஏற்பட்டது ஈட்டிப் படத்தின்போதுதான்.

அதில் ஒரு ஸ்ப்ரின்ட்டராக நடித்திருப்பேன். அந்த கதாபாத்திரத்துக்கு உடலை ஃபிட்டாக வைக்காமல் தொப்பையும் தொந்தியுமாக இருந்தால் மக்கள் மனதில் நிற்காது. அதனால் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு சிக்ஸ்பேக் எல்லாம் வைத்து நிஜ ஸ்பிரின்ட்டராகவே தோற்றமளித்தேன். அதற்காக நிறைய உழைத்தேன். அந்த ஃபிட்னெஸ் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதன்பிறகு அதை அப்படியே வழக்கமாக்கிக் கொண்டேன். என்னால் எவ்வளவு காலம் முடியுமோ அதுவரை இந்த ஃபிட்னெஸை மெயின்டன் செய்ய வேண்டும் என முடிவெடுத்து இது வரை பின்பற்றி வருகிறேன். எனவே, எனது தினசரி வழக்கத்தில் இப்போது வொர்க்கவுட்டும் ஒரு அங்கமாகிவிட்டது. அது எந்த எந்தளவிற்கு என்றால், நான் ஒரு ஃபிட்னெஸ் வெறியன் எனுமளவுக்கு மாறிவிட்டது.

மேலும் என்னோட ஃபிட்னெஸ் டிரைனர் சாஜு என்ன சொல்கிறாரோ அதை அப்படியே கடைபிடிக்கிறேன். பொதுவாக ஒருநாளைக்கு 24 மணி நேரம் இருக்கிறது. அதில் ஒரு மணி நேரத்தை எனக்காக ஒதுக்கிக் கொள்கிறேன் என்பதை எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். நான் பிசிக்கலா ஃபிட்டாக இருப்பதை தாண்டி, நான் மென்ட்டலா ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அதற்கு உடற்பயிற்சி முக்கிய காரணமாகும். அதுபோன்று என் படத்திற்கு என்ன தேவையோ அதில் நான் எப்போதும் கண்டிப்பாக இருப்பேன். அதற்கு தகுந்த உடல்வாகும், டயட்டும் பின்பற்றுவேன்.

டயட்: நான் ஒரு ஃபுட்டி என்று சொல்லுமளவிற்கு உணவு பிரியன். அதிலும், பிரியாணி போன்ற ஸ்பைஸியான மசாலா உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடுவேன். ஆனால், எப்போது சிக்ஸ்பேக் வைக்க தொடங்கினேனோ அதிலிருந்து உணவில் கட்டுப்பாட்டை கொண்டு வந்துவிட்டேன். இப்போது, காய்கறிகளை ஆவியில் வேக வைத்தோ, வதக்கியோ அரை உப்பும் மிளகுத்தூளும் சேர்த்து சாப்பிடுவேன்.

அசைவம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் எண்ணெயில் பொரித்ததாக இல்லாமல் கிரேவியாக வேக வைத்த சிக்கன், மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்வேன். அதுபோன்று அரிசி சாத உணவுகளையும் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். சிறு வயதில் இருந்தே அரிசி சாதம் சாப்பிட்டு வளர்ந்தவர்கள் நாம் என்பதால் ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், படிப்படியாக அது பழகிவிட்டது. இப்போது அரிசி சாதம் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் கிடையாது.

இது தவிர எனது தினசரி டயட் காலையில், பழைய சாத கஞ்சி மற்றும் 6 அவித்த முட்டைகள் சாப்பிடுவேன். மதிய உணவில் ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக அரிசி சாதம், ஒரு சிக்கன் துண்டு, ஒரு கிண்ணத்தில் வதக்கிய காய்கறிகள், பிறகு கொஞ்சமாக சூடான குழைத்த கஞ்சி சாதம். இதுதான் எனது தினசரி மதிய உணவு. இதில் எப்போதும் மாற்றம் இருக்காது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஹை புரோட்டீன் ரீச் உணவுகளாக இருக்கும்.

கடந்த சில மாதங்களாக ராமேஸ்வரத்தில் சூட்டிங்கில் இருந்ததில், இப்போது எனது பேவரைட் உணவாக மோர் குழம்பு, மீன் ப்ரை, பச்சை மிளகாய், சின்னவெங்காயம் சேர்த்த பழைய சாத கஞ்சி – கருவாடு ப்ரை போன்றவை இணைந்திருக்கிறது. மற்றபடி வாரத்தில் ஒருநாள் மட்டும் எனக்கு பிடித்த பிரியாணி, ஸ்பைஸியான உணவுகள் என என்னவெல்லாம் பிடிக்கிறதோ அதை எல்லாம் சாப்பிடுகிறேன். அதற்கு தகுந்தவாறு உடற்பயிற்சியையும் கூட்டிக் கொள்வேன். அதுபோன்று, நமது உடலை நீரேற்றமாக வைக்க ஒருநாளைக்கு தேவையான தண்ணீர் அருந்தவும் தவறுவதில்லை. இவைகள்தான் எனது ஃபிட்னெஸ் ரகசியங்கள்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

Tags : Atharvaa ,Murali ,
× RELATED இளம் வயது முடக்கு வாதம் தீர்வு என்ன?