பரிதவிக்க விடுவதால் தொடரும் அவலம் குளிர்காலத்தில் அதிகளவில் உயிர் துறக்கும் முதியோர்கள்: பல்வேறு பாதிப்புகள் தாக்கும் அபாயம்

நவீன வளர்ச்சிகளில் நாடு இன்று நொடிக்கு நொடி முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிலும் மருத்துவத்துறை அதிநவீன கண்டுபிடிப்புகளால் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதன்மூலம் ஒரு காலத்தில் உலகளவில் 50ஆண்டுகளாக இருந்த மனிதர்களின் ஆயுட்காலம் தற்போது 75ஆண்டுகள் வரை நீடித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. 1950ம் ஆண்டில் 25 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம், 2024ல் 7.7 சதவீதமாக குறையும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க வசதி படைத்தவர்களே இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் ெகாள்ளும் நிலை உள்ளது. ஆனால் எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள், வயது முதிர்ந்த நிலையில் உழைக்கும் திறன் இழந்து விட்டால் தேவையற்ற பொருளாகவே பார்க்கப்படுகின்றனர். இதில் பிள்ளைகளும், உறவுகளும் புறக்கணிக்கும் நேரத்தில் வசதி படைத்தவர்கள் கூட, இது போன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இவர்கள் கடும்பனி, கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என்று ஒவ்வொரு சீதோஷ்ண காலங்களையும் பெரும் சிரமத்துடன் எதிர்கொண்டு வருகின்றனர். இவர்களது உடல்நிலை சற்று சீராக இருந்தாலும், உறவுகள் புறக்கணிக்கும் போது ஏற்படும் விரக்தி அவர்களை கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறது. அதோடு தங்குவதற்கு பாதுகாப்பான இடம், போதிய உணவு இல்லாத நிலையில் மனஉளைச்சலும் அதிகரித்து இறப்பை தழுவி வருகின்றனர்.

இந்த வகையில், தற்போது நிலவி வரும் குளிர் பாதிப்புகளால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பெருநகர மருத்துவமனைகளில் ஆதரவற்ற சடலங்கள் என்ற பெயரில் குவியும் உடல்கள் இதனை உறுதிப்படுத்தி வருகிறது. வாங்கிச் செல்ல ஆளில்லாமல் பலநாட்களாக பிணவறையில் சடலங்கள் காத்திருக்கும் அவலமும் தொடர்கிறது.

இது குறித்து முதியோர் நலன்சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் குழந்தைகளையும், முதியவர்களையும் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்த காலகட்டத்தில் சளி, காய்ச்சல், இருமல், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் அதிகளவில் அவர்களை தாக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரத்தில் பசியும், போதிய அரவணைப்பு இல்லாததும் சேர்ந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதை பிள்ளைகளும், உறவுகளும் உணரவேண்டும். இந்தவகையில் தற்போது பெய்யும் மழை, கடும்பனியால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆதரவற்ற முதியவர்கள் இறப்பை தழுவியுள்ளனர். நாடு முழுவதும் இந்தநிலை காணப்படுகிறது. தமிழகத்திலும் பெருநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடங்களில் நூற்றுக்கணக்கான சடலங்கள், உறவினர்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

உதாரணமாக சேலம் சரகத்தை எடுத்துக் கொண்டால் இங்கு சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் உள்ளது. இந்த மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதத்தில் 50க்கும்மேற்பட்ட முதியவர்கள் அடையாளம் தெரியாத நிலையில் இறப்பை தழுவியுள்ளனர். இயந்திர மயமாகி விட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் யாரும், இதை ஒரு ெபாருட்டாய் எடுத்துக் கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் அதன் வளர்ச்சியில் சங்கமித்து நலம் பெறுவதற்கு உரிமை உள்ளது. ஆனால் பாகுபாடுகளும், மறைந்து வரும் மனிதநேயமும் இதற்கு இடம் கொடுக்கவில்லை என்பது மிகவும் அபத்தமானது. ஆதரவற்ற முதியவர்களை மீட்டு, மறுவாழ்வு அளிப்பதற்கு அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனாலும் தங்களை வளர்த்து ஆளாக்கிய முன்னோடிகளை பரிதவிக்க விடக்கூடாது என்ற எண்ண ஓட்டம், ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் வரவேண்டும். அப்போது தான், தொடரும் இது போன்ற அவலங்களுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

* நுரையீரல் பாதிப்பே இறப்புக்கு காரணம்
‘‘தற்போது முதியோர் இறப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது நுரையீரல் சார்ந்த நோய்களாகும். குளிர் மற்றும் மழைக்காலத்தில் இந்த நோய்களின் தாக்கம் அவர்களிடம் அதிகமாக இருக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பும், ஆதரவும், கண்காணிப்பும் மிகவும் அவசியமான ஒன்று. இதை உணராமல் பிள்ளைகளும், உறவுகளும் அவர்களை அலட்சியப்படுத்தும் போது, பெரிய அளவிலான மனஉளைச்சல் ஏற்படுகிறது.

அதோடு வீட்டை விட்டு வெளியேற்றப்படும் போது, நோயின் தாக்கமும் அதிகரித்து, உயிர்துறக்கும் அவலம் அரங்கேறுகிறது. கடந்த 2 மாதங்களில், அரசு மருத்துவமனைகளுக்கு ஆதரவற்ற நிலையில் வந்து உயிர் துறந்த முதியவர்களின் உடல் பரிசோதனை இதை உறுதிப்படுத்தியுள்ளது,’’ என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

* டிசம்பர்-பிப்ரவரி காய்ச்சலின் உச்சம்
காய்ச்சலின் உச்சக்கட்ட பரவல் என்பது, டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் நிகழ்கிறது. இந்த காலகட்டத்தில் 65வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களே கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நலம் சார்ந்த சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். காய்ச்சல் தொடர்பான பாதிப்புகளால் இறப்பவர்கள் 50முதல் 70சதவீதம் முதியவர்கள் தான்.

இதேபோல் கை, கால்களில் விறைப்பு, தூக்கம், மந்தமான பேச்சு என்று அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கும். இதை கருத்தில் கொண்டு நாம், அவர்களை பேணிக்காக்க வேண்டும். அலட்சியமாக இருந்தால், இறப்பு போன்ற அபத்தங்கள் நிகழ்வதை தவிர்க்க முடியாது என்றும் மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

* மாரடைப்பு வருவதற்கு குளிர் காற்றே காரணம்
குளிர்காலத்தில் இதயநோய் பாதிப்பு கொண்டவர்களும், முதியவர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தகாலத்தில் வீசும் குளிர்ந்த காற்று என்பது ரத்த நாளங்களை சுருக்கி விடுகிறது. இதனால் ரத்தஅழுத்தம் அதிகரிக்கிறது. இது மாரடைப்புக்கு வழிவகுக்கிறது. இதே போல், பல முதியவர்களுக்கு தசைபலவீனம், செவித்திறன் குறைபாடு, பார்வை குறைதல், மந்தமானநிலை, வழக்கமான பணிகளை செய்ய இயலாமை போன்ற பாதிப்புகளும் ஏற்படுகிறது.

இது முதியவர்களின் உடல்நிலையை மேலும் மோசமாக மாற்றுகிறது. முதியவர்களை பொறுத்தவரை வயதுக்கு ஏற்ப சாதரண உடல் வெப்பநிலையை பராமரிப்பது மிகவும் கடினம். இதன் காரணமாக குளிர்கால நோய் பாதிப்புகள் அவர்களை எளிதாக தொற்றிக்கொள்கிறது என்பதும் மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவல்.

* இது ஒன்றே எதிர்பார்ப்பு
‘‘பெரும்பாலான முதியவர்களுக்கு நீண்ட காலம் வாழ்வதை விட, இறக்கும் வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டமே பிரதானமாக உள்ளது. ஆரோக்கியமான உணவு, எளிய உடற்பயிற்சி, நல்ல உறக்கம் என்ற மூன்று இதற்கு மிகவும் அவசியம். இந்த மூன்றும் அவர்களுக்கு கிடைக்க குடும்பத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். ஆனால் ஆதரவற்ற நிலையில் தெருவில் விடப்படும் முதியவர்களுக்கு இது சொற்ப அளவில் கூட கிடைப்பதில்லை. அதோடு மனஉளைச்சலும் சேர்ந்து கொள்ள இறப்பு அவர்களை எளிதாக தழுவிக் கொள்கிறது,’’ என்பது உடற்கூறு ஆய்வாளர்கள் கூறும் தகவல்.

Related Stories: