×

தவறை ஒப்புக் கொண்டது; இந்திய சட்டத்திற்கு முற்றிலும் கட்டுப்படுவதாக எக்ஸ் உறுதி: 3,500 ஆபாச ஏஐ பதிவுகள் நீக்கம்; 600 கணக்குகள் நிரந்தர முடக்கம்

புதுடெல்லி: பிரபல சமூக ஊடகமான எக்ஸ் தளத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவையான க்ரோக் செயலி மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்படுவது உலகம் முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட க்ரோக் ஏஐயின் ஆபாச உள்ளடக்கங்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்களை 72 மணி நேரத்தில் நீக்க ஒன்றிய அரசு கெடு விதித்தது.

இதைத் தொடர்ந்து, ஆபாச உள்ளடக்கங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தால் அந்த பதிவுகள் நீக்கப்படுவதோடு சம்மந்தப்பட்ட கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எக்ஸ் நிறுவனம் அறிவித்தது. மேலும், கூடுதல் அவகாசத்திற்கு பின்னர் கடந்த 7ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக முக்கிய விளக்கங்கள் இல்லாததால் அவற்றை தருமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தியது. அதன்படி, ஆபாச உள்ளடக்கங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் எக்ஸ் தளம் அறிக்கை தந்தது.

அதில், க்ரோக் ஏஐயின் 3,500 ஆபாச உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டு, அவற்றை பகிர்ந்த 600 கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விஷயத்தில் தனது தவறை ஒப்புக் கொண்டதோடு, இந்திய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு முழுமையாக கட்டுப்படுவதாகவும் எக்ஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Tags : New Delhi ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...