×

நம்பி மோசம் போயிட்டோமே என புலம்பும் அதிமுக நிர்வாகிகள்: திருப்பத்தூர் தொகுதி அன்புமணிக்கு ஒதுக்கீடு..? அல்வா கொடுத்த முன்னாள் அமைச்சர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள அன்புமணிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக-அன்புமணி பாமக கூட்டணி ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் அன்புமணிக்கு 17 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த 17 தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்களின் மொத்த செலவையும், அதிமுக ஏற்றுக் கொள்ளும் என்று ‘டீல்’ முடிக்கப்பட்டுள்ளதாம்.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2016ம் ஆண்டுக்கு முன் 10 ஆண்டு காலம் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து பாமக வெற்றி பெற்றது. ஆனால் 2016ம் ஆண்டு அப்போதைய அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி தேமுதிகவிற்கு கொடுக்கும் சீட் டை கறாராக பேசி அதிமுகவுக்கு பெற்றுக் கொடுத்தார். அதில், மறைந்த கேஜி ரமேஷ் எம்எல்ஏவாக வெற்றிபெற்று பொறுப்பேற்று செயல்பட்டார்.

தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் 3 அணிகளாக பிரிந்து கட்சி பணிகளை செய்து வருகின்றனர். அதில் திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் திருப்பதி, அதிமுக நகர செயலாளர் டி.டி.குமார், கந்திலி ஒன்றிய செயலாளர் டி.டி.சங்கர் ஆகிய 3 நிர்வாகிகளும் எங்களுக்குத்தான் சீட்டு என்றும், நாங்கள் தான் வேட்பாளராக நிற்போம் என்றும், ஒருவருக்கொருவர் பல்வேறு தரப்பினரிடம் மார்தட்டி தெரிவித்து வருகின்றனர். அதேபோல் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியிடம், தொடர்ந்து மூன்று தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதன்காரணமாக யாருக்கு சீட் தருவது என முன்னாள் அமைச்சர் வீரமணி குழப்பத்தில் இருந்து வருகிறாராம். 2 கண்களுக்கு கொடுப்பதா? அல்லது 3வது கண்ணுக்கு சீட்டு கொடுப்பதா? என முன்னாள் அமைச்சர் வீரமணியை தலைசுற்ற வைத்துள்ளனர் இந்த முப்படை நிர்வாகிகள்.

இந்நிலையில், கூட்டணி ஒப்பந்தம் போட்ட அன்புமணி, ‘நாங்கள் கேட்கும் இடங்கள் தான் எங்களுக்கு வழங்க வேண்டும்’ என எடப்பாடிக்கு ஒரு நிபந்தனை வைத்ததாக கூறப்படுகிறது. அந்த நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டாராம். அதன்படி, அன்புமணி கொடுத்த லிஸ்டில் திருப்பத்தூர் தொகுதியும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், திருப்பத்தூர் தொகுதியை அன்புமணிக்கு கொடுக்கப்பட உள்ளாதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்த டி.கே.ராஜாவிற்கு இம்முறை பாமக கூட்டணியில் சீட்டு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனால், சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் அனைவரும் அதிர்ந்து போய் உள்ளார்களாம்.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நிர்வாகிகளுக்கு அல்வா கொடுத்துவிட்டார். இப்போது நாம் என்ன செய்வது, 5 ஆண்டுகளாக கட்சிக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து உழைத்த நமக்கு சீட் கிடைக்குமா?, கிடைக்காதா?, முன்னாள் அமைச்சரை நம்பி நாம மோசம் போயிட்டோமே என்று சீட்டுக்காக கனவு கண்ட நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். எது எப்படியோ, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு சீட் கேட்டு அதிமுக நிர்வாகிகளின் குடைச்சல் இனி இருக்காது என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறாராம் மாஜி அமைச்சர் வீரமணி.

Tags : Nami ,Boitome ,Thirupathur ,Anbumani ,Tirupathur ,Tirupathur Assembly Constituency ,Adimuga Alliance ,Tamil Nadu ,
× RELATED சொல்லிட்டாங்க…