×

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தர்கா கொடி ஏற்ற அனுமதித்தது ஏன்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி

மதுரை: கோயிலுக்கு சொந்தமான மரத்தில் தர்கா கொடி ஏற்ற ஏன் அனுமதித்தீர்கள் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் கடந்த டிச. 17ல் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை செயலர் முருகானந்தம் வீடியோ கான்பரன்சில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி, ‘‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்’’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு தலைமைச் செயலர், ‘‘நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த உத்தரவில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை இருப்பதால் மேல்முறையீடு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது ஏற்புடையது அல்ல. ஏற்கனவே திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்ட வழக்குகளில் நான் பிறப்பித்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை’’ எனக் கூறி விசாரணையை தள்ளி வைத்திருந்தார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மதுரை கலெக்டர் பிரவீன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு கிடைத்து 3 நாட்கள் தான் ஆகிறது. எனவே, அவமதிப்பு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘கோயிலுக்கு சொந்தமான கல்லாத்தி மரத்தில் எப்படி தர்கா கொடி கட்ட அனுமதித்தனர்? அது கோயில் இடம் என உறுதி செய்யப்பட்ட பின்னும் அதை எப்படி அனுமதித்தீர்கள்’’ என்றார். கோயில் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், ‘‘கொடி ஏற்றியது தொடர்பாக தர்கா தரப்பினர் ேகாயில் தரப்பிடம் முறையான அனுமதி எதுவும் பெறவில்லை. தர்கா தரப்பினரின் செயல் குற்றவியல் அத்துமீறலாகும். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் கோயில் தரப்பில் புகார் அளித்து, முறையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி, கோயில் தரப்பை பார்த்து, ‘‘இதையெல்லாம் நீங்கள் தான் செய்தீர்களா? அல்லது சேகர்பாபு சொல்லி செய்தீர்களா? நீதிமன்ற உத்தரவை ஏன் செயல்படுத்தவில்லை. சந்தனக்கூடு விழாவின்போது ஏன் 163 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. நீதிமன்றத்தில் உரிய பதில் அளிக்கவில்லை என்றால் தலைமை செயலாளர் பதில் அளிக்க நேரிடும். இந்த நீதிமன்றத்தின் உத்தரவை ஏன் செயல்படுத்தவில்லை என்பது குறித்து, மதுரை கலெக்டரும், போலீஸ் துணை கமிஷனரும் விளக்கமளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார். தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை பிப். 2க்கு தள்ளி வைத்தார்.

Tags : Thiruparankundram ,Judge ,G.R. Swaminathan ,Madurai ,Thiruparankundram hill ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...