திருத்தணி, ஜன.10: தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப, தமிழர்களின் பாரம்பரிய திருநாளாக போற்றப்படும் தை பொங்கல் பண்டிகை அன்று, புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வணங்கி பாரம்பரிய முறையில் கொண்டாடப்படுவது சிறப்பு. பொங்கல் விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக புதுப்பானைகள் தயாரிக்கும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். நாகரீகம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள கால கட்டத்திலும், பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை கொண்டாட இளம் தலைமுறையும், நகர்புறங்களில் வசிப்பவர்களும் கிராமங்களுக்கு சென்று குடும்பத்துடன் பொங்கல் விழாவை கொண்டாட ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், புதுப்பானை செய்யும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
