சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய வழக்கில் இயக்குனர் வ.கௌதமன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை: சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய வழக்கில் இருந்து இயக்குனர் வ.கௌதமன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, மீனவர் பிரச்சனை தொடர்பாக கத்திப்பாரா பாலத்தில் 8 ஆண்டு முன் போராட்டம் நடத்தினார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு இயக்குனர் வ.கௌதமன் உள்ளிட்டோர் பூட்டு போட்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

சென்னை கிண்டி பகுதியில் அமைந்துள்ளது கத்திப்பாரா பாலம். இந்த பாலம் தாம்பரம், கோயம்பேடு, போரூர், அடையாறு மார்க்கம் வழியாக வரும் வாகனங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ள சென்னையின் மிக முக்கியமான பாலமாகும். விவசாயிகளுக்கு ஆதரவாக இயக்குநர் கவுதமன் தலைமையில் கத்திப்பாரா பாலத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென கத்திப்பாரா பாலத்துக்குச் சென்ற போராட்டக் குழுவினர் பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு பாலத்தின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரை பெரிய இரும்புச் சங்கிலியால் பாலத்தை மறித்து பூட்டு போட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போனது. காலை அலுவலக நேரம் என்பதால் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்குப் பிறகே காவல்துறையினருக்கு விஷயம் தெரிந்தது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கவுதமன் உள்பட அவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.

பின்னர் இரும்புச் சங்கிலியை அறுத்தனர். இரும்புச் சங்கிலியை அறுத்து போக்குவரத்தை சரி செய்வதற்கு காவல்துறையினருக்கு நீண்ட நேரம் ஆனது. பிறகு கவுதமன் உள்பட 6 பேரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் அனைவரையும் ஏப்ரல் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு இயக்குனர் வ.கௌதமன் உள்ளிட்டோர் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய வழக்கில் இயக்குனர் வ.கௌதமன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது

 

Related Stories: