சென்னை: உங்கள் பெயர், உங்கள் உறவினர்கள்- நண்பர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை ஜனவரி – 18 க்குள் உறுதி செய்யுங்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்டக்கழகம் சார்பில், அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் பயிற்சி முடித்தவர்கள் மற்றும் பயிற்சி பெறுகின்ற 4,500 பேருக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகளை, சென்னை பாரிமுனையில் நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்திப் பேசினார். அப்போது அவர், உங்கள் பெயர், உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று தயவுசெய்து சரிபாருங்கள். இல்லையென்றால், உடனடியாக நம் பி.எல்.ஏ-2 முகவர்களைத் தொடர்புகொண்டு விண்ணப்பம் அளித்து, பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். வரும் ஜனவரி 18-ஆம் தேதி வரை இதற்கு அவகாசம் உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய சிறப்புரையின் விவரம் வருமாறு: இங்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் முதலில் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் பயிற்சி முடித்த மற்றும் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கக்கூடிய 4,500 மாணவ-மாணவிகளுக்கு இன்றைக்குப் பொங்கல் நலத்திட்ட உதவிகளை, உங்களையெல்லாம் சந்தித்து மகிழ்ந்து வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். இந்த நிகழ்ச்சியில் நான் பேசுவதாக இல்லை; வந்து நலத்திட்ட உதவிகளைக் கொடுத்துவிட்டுப் போவதாகத்தான் இருந்தேன்.
இங்கு வந்து உங்களுடைய இந்த அன்பான வரவேற்பு, சிரித்த முகம் இதையெல்லாம் பார்த்துவிட்டுப் பேசாமல் போனால், நீங்கள் கோபித்துக்கொள்வீர்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக இரண்டே நிமிடம் பேசுகிறேன். சேகர் பாபு அவர்களைப் பொறுத்தவரை எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் அதனைத் தனித்தன்மையோடு, மிகுந்த சிறப்போடு ஏற்பாடு செய்யக்கூடியவர். அதனால்தான் நம்முடைய தலைவர் அவர்கள் எப்பொழுதும் அவரைச் சொல்லும்போது, திரு.சேகர் பாபு கிடையாது, நீ செயல் பாலு’’ என்று பாராட்டுவார். நான் அவரை அதைவிட அதிகமாகப் பாராட்டியிருக்கிறேன்.
இன்றைக்கு இந்தத் திராவிடப் பொங்கலை முன்னிட்டு, திராவிட மாடல் அரசு ஒரு பக்கமும், நம்முடைய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு பக்கமும் மக்களுக்குத் தொடர்ந்து இது போன்ற நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளை வழங்கிக்கொண்டிருக்கிறோம். முக்கியமாக, அரசு இன்றைக்குப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நம்முடைய முதலமைச்சர் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3,000 ரூபாய் ரொக்கப் பரிசுத் தொகையாக அறிவித்து, இன்றிலிருந்து அது வழங்கப்பட இருக்கிறது.
உங்களில் பல பேர் அதனை இன்று வாங்கியிருப்பீர்கள். அடுத்த நான்கு ஐந்து நாட்களில் தமிழ்நாடு முழுவதும் அனைவருக்கும் தலைவர் அறிவித்திருக்கிற பொங்கல் பரிசு 3,000 ரூபாய் மற்றும் விலையில்லா வேட்டி-சேலை, கரும்பு, சர்க்கரை, அரிசி அனைத்தும் வழங்கப்படும். ஆகவே, இந்தப் பொங்கல் ஒரு மகிழ்ச்சியான, உற்சாகமான பொங்கலாக இருக்க வேண்டும் என்று நம்முடைய அரசும், நம்முடைய முதலமைச்சர் அவர்களும் பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்துகொண்டிருக்கிறார்.
பொங்கல் நலத்திட்டம்
பொங்கல் நலத்திட்டம் என்றால், பொதுவாகக் கட்சிக்காரர்களுக்கு அல்லது பொதுமக்களுக்கு நலத்திட்ட நிகழ்ச்சி நடத்துவார்கள். ஆனால், சேகர் பாபு மட்டும்தான் தன்னுடைய தொகுதியில் இருக்கக்கூடிய அத்தனை மகளிரையும் ஒன்றாக அழைத்து, அதுவும் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்ற ஒரு அமைச்சராக, மாவட்டக் கழகச் செயலாளராகச் செயல்படுகிறார். எனவே, என்னை அழைத்ததற்காக, மாணவிகளாகிய உங்கள் சார்பாக அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இந்த மாவட்டத்தில் நான் கலந்துகொள்கின்ற இரண்டாவது நிகழ்ச்சி இது. இதனை முடித்துவிட்டு இன்னும் மூன்று நிகழ்ச்சிகள் இருக்கின்றன.
முதல் நிகழ்ச்சியாக இங்குள்ள பாரதி கல்லூரியில், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரங்கம் வேண்டும் என்பதை உடனடியாக முதலமைச்சரிடம் கொண்டு சென்று, இன்று 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்துள்ளோம். இன்னும் நான்கு மாதங்களில் ஒரு சிறந்த உலகத்தரம் வாய்ந்த அரங்கம் சேகர் பாபு முயற்சியால் அங்கு வர இருக்கிறது. பள்ளி, கல்லூரி படிப்பைத் தாண்டித் திறன் சார்ந்த கல்வியையும் நீங்கள் பெறுவதைப் பார்க்கும்போது மிகுந்த பெருமையாக இருக்கிறது. நம் திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை, இது மகளிருக்கான சிறப்பான அரசாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கே உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
950 கோடி பயணங்கள்
நம் அரசு அமைந்த பின்பு, முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் முதல் நாள் இட்ட ஐந்து கையெழுத்துகளில், முதல் கையெழுத்து உங்களுக்கானது. அதுதான் `விடியல் பயணத் திட்டம்’ எனப்படும் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துத் திட்டம். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மகளிரும் குறைந்தது 1,000 ரூபாய் வரை சேமிக்கிறீர்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் 950 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று பல மாநிலங்கள் இந்தத் திட்டத்தைப் பார்த்துத் தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தியுள்ளன.
குழந்தைகள் படிக்க வேண்டும், குறிப்பாக பெண் குழந்தைகள் கற்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ‘காலை உணவுத் திட்டத்தைத்’ தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் நாளொன்றுக்கு 20 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர். அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகள் உயர்கல்வி கற்கச் செல்லும்போது அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ‘புதுமைப்பெண் திட்டம்’ மூலம் 1,000 ரூபாயும், மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’ மூலம் 1,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை
இவை அனைத்திற்கும் மேலாக, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்’ மூலம் கடந்த மாதம் வரை 1 கோடியே 13 லட்சம் மகளிர் பயனடைந்தனர். இந்த மாதத்திலிருந்து 1 கோடியே 30 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையைத் தலைவர் வழங்கி வருகிறார்.
10 லட்சம் மடிக்கணினிகள்
மேலும், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் அதிநவீன மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 35 லட்சம் மாணவர்கள் திறன் பயிற்சி பெற்று, போட்டித் தேர்வுகளில் பங்கேற்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாகத் தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே வேலைக்குச் செல்லும் மகளிரில் 42 விழுக்காட்டினர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது நம் மாநிலத்திற்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமை. உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஒரே வேண்டுகோள்
உங்களிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள். தேர்தல் ஆணையத்துடன் இணைந்து எஸ்.ஐ.ஆர். திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். சென்னையில் மட்டும் 20 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மகளிர், சிறுபான்மை மக்களின் வாக்குகளை எல்லாம் தேடித் தேடி நீக்கியுள்ளார்கள்.
எனவே, உங்கள் பெயர், உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று தயவுசெய்து சரிபாருங்கள். இல்லையென்றால், உடனடியாக நம் பி.எல்.ஏ-2 முகவர்களைத் தொடர்புகொண்டு விண்ணப்பம் அளித்து, பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். வரும் ஜனவரி 18-ஆம் தேதி வரை இதற்கு அவகாசம் உள்ளது.
உங்கள் வாக்குரிமையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் வெற்றி உங்கள் கைகளில் இருக்கிறது. இங்கு வந்துள்ள தாய்மார்கள், மகளிர், மாணவிகள் அதை உறுதிப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்கள் எதிர்காலம் சிறக்க நாங்கள் என்றும் துணையாக நிற்போம். எனவே நீங்கள் நம் அரசுக்கும், முதலமைச்சருக்கும் பக்கபலமாக இருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு கூறினார்
நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியாராஜன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், பகுதிக் கழகச் செயலாளர்கள் ராஜசேகர், முரளி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கனி, கலைச்செல்வி, மண்டலக் குழுத் தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பரிமளம், தொகுதிப் பார்வையாளர் நரேந்திரன், இளைஞர் அணி அமைப்பாளர் வானவில் விஜய், வட்டக் கழகச் செயலாளர்கள் பரத்குமார், ராஜா உள்படப் பலரும் கலந்துகொண்டனர்.
