×

தமிழகத்தில் பிரிவினை ஏற்படுத்த இந்துத்துவா சக்திகள் முயற்சி: வைகோ குற்றச்சாட்டு

 

மேலூர்: தமிழகத்தில் பிரிவினை ஏற்படுத்த இந்துத்துவா சக்திகள் முயற்சி செய்கின்றன என வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2ம் தேதி திருச்சியில் சமத்துவ நடைபயணம் தொடங்கி மேற்கொண்டு வருகிறார். பயணத்தின் 7வது நாளான நேற்று மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம்பட்டியில் இருந்து வைகோ, கட்சி தொண்டர்கள் புடைசூழ நடைபயணத்தை தொடங்கினார். பின்னர் அய்யாபட்டி வழியாக கருங்காலக்குடி வந்தடைந்தார்.

வழிநெடுகிலும் பழைய தத்துவப் பாடல்களை ஒலிபெருக்கியில் கேட்டபடியே நடைபயணத்தை தொடர்ந்த வைகோ, கருங்காலக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையே போதைப்பழக்கம் அதிகரித்து வருவது, சமூகச் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். தமிழ்நாடு அரசு அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பிரிவினை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதற்கு தமிழக மக்கள் இடம் அளிக்காமல், ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக வாழ வேண்டும். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும்.

மதிமுக சார்பில் சீட்டோ அல்லது தொகுதியோ கேட்டு திமுக தலைமையை தொந்தரவு செய்யமாட்டோம். ஜனநாயகன் படத்தை தாராளமாக திரையரங்குகளில் திரையிடலாம். திமுக கூட்டணி கட்சிகள் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்டது இல்லை. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையே அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். இதை வலியுறுத்தியே நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறேன். நான் மேற்கொண்ட அனைத்து நடைபயணங்களும் வெற்றியில் முடிந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Waiko ,Maleore ,Hindu ,Secretary General ,Wiko ,Equality Walk in ,Trishi ,Madurai district ,
× RELATED சொல்லிட்டாங்க…