×

விஜய் பட பிரச்னைக்கும் பாஜவுக்கும் தொடர்பா? அதிமுக கூட்டணியில் 60 சீட்டா? நயினார் பரபரப்பு பேட்டி

கோவை: கோவை விமான நிலையத்தில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. 60 சீட் கேட்குற மாதிரி சொல்லியிருப்பார்கள். ஆனால், இதுவரை கேட்கவில்லை. எந்தெந்த இடங்களில் பாஜ போட்டியிடும் என்பதை எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து பேசி சுமுக முடிவு எட்டப்படும். தேர்தல் தேதியை முதலில் அறிவிக்கட்டும், பிறகு எவ்வளவு சீட் என முடிவு செய்யலாம். ஜனநாயகன் பட விவகாரத்தில் சென்சார் போர்டுக்கும், எங்களுக்கும் இந்த படம் திரையிடப்படக்கூடாது என்ற எண்ணம் கடுகளவும் கிடையாது.

சென்சார் போர்டு சில விதிமுறைகளை சொல்லியிருக்கிறார்கள். படத்தில் சில காட்சிகளை காட்டலாம், கட்டக்கூடாது என இருக்கிறது. அது என்ன என படத்தை முழுதாக பார்த்தால் தான் தெரியும். படத்தை முழுதாக பார்த்த சென்சார் போர்டு சில கருத்துகளை சொல்லியிருக்கிறார்கள். அது சரியா, தவறா என்ற விபரத்திற்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், பாஜவிற்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. தேமுதிக கூட்டணிக்கு வர வேண்டும் என நினைக்கிறோம். முடிவு அவர்கள் கையில் உள்ளது. பராசக்தி படத்தை நான் பார்க்கவில்லை, நீங்களும் பார்க்கவில்லை. டிரெய்லரில் போடுவதை நாம் உறுதியாக சொல்ல முடியாது. இருந்தாலும் இப்போது உள்ள காலகட்டத்தில் எல்லா மொழியையும் படிக்க மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

ராமதாஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இபிஎஸ் முடிவு செய்வார். அவர் திமுக கூட்டணிக்கு செல்வாரா? என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். ஓபிஎஸ் உள்ளிட்ட யாரை கட்சியில் சேர்ப்பது என்பதை, எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்ய வேண்டும். அமித்ஷாவை டிடிவி தினகரன் சந்தித்தாரா? என்பது தெரியாது.இவ்வாறு அவர் கூறினார். திரைப்படத்திற்கு நெருக்கடி தந்து விஜய்யை அடிபணிய வைக்க பாஜ முயற்சிக்கிறதா? என்ற கேள்விக்கு, ‘‘யாரையும் அடிபணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த மாதிரி வேலைகளில் ஈடுபடுவதும் இல்லை. அதை இனியும் யோசிக்க வேண்டியதில்லை’’ என நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

Tags : Vijay ,BJP ,AIADMK alliance ,Nainar ,Coimbatore ,president ,Nainar Nagendran ,Coimbatore airport ,AIADMK ,
× RELATED கரூரில் 41 பேர் பலியான வழக்கு: விஜய் பிரசார வாகனம் பறிமுதல்?