×

மேற்குவங்கத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பு ஐ பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு: திரிணாமுல் வேட்பாளர் பட்டியல், தேர்தல் வியூகங்கள் பறிமுதல்? உள்ளே புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்ற முதல்வர் மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஐ-பேக் தலைவர் பிரதீக் ஜெயின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். திரிணாமுல் காங்கிரஸ் தரவுகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய முயன்றதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் தொடங்கி டிசம்பர் 11ம் தேதி முடிவடைந்தது.

டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் மாநிலத்தில் மொத்தம் 58லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடைமுறைகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தன்னிச்சையான முறையில் செயல்பட்டு வருவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆலோசனை வழங்கக்கூடிய நிறுவனமாக ஐ-பேக் செயல்பட்டு வருகின்றது. மேலும் கட்சியின் தகவல் தொழில்நுட்ப மற்றும் ஊடகப் பிரிவை கவனித்துக்கொள்ளும் நிறுவனமாகவும் ஐ-பேக் உள்ளது.

எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் உத்திகள் உள்ளிட்ட பல முக்கிய விவரங்கள் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்தது. இந்நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை குறிவைக்கும் வகையில் ஐ-பேக் நிறுவனத்தின் தலைவர் பிரதீக் ஜெயின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

மேற்கு வங்கத்தில் 6 இடங்கள், டெல்லியில் 4 இடங்கள் என 10 இடங்களில் துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்கள். பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி கடத்தல் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணை தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கொல்கத்தாவின் சால்ட் லேக்கின் செக்டார் வி பகுதியில் அமைந்துள்ள ஐ-பேக்கின் அலுவலகம் மூடியிருந்தது. அலுவலர்கள் யாரும் வராத நிலையில் நேற்று காலை 6 மணிக்கே அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை சுமார் 9 மணி நேரம் நீடித்தது. இதேபோல் லவ்டவுனில் உள்ள ஜெயினின் இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் தரவுகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை சோதனை நடந்துகொண்டு இருந்தபோதே பிரதீக் ஜெயினின் வீட்டிற்கு முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென வந்தார். போலீஸ் மூத்த அதிகாரிகள் அப்பகுதியைச் சுற்றி வளைத்திருந்தனர். பிதான்நகர் மேயர் கிருஷ்ணா சக்ரவர்த்தி மற்றும் அமைச்சர் சுஜித் போஸ் உட்பட பல உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள், டிஜிபி ராஜீவ் குமாரும் அங்கு வந்தனர்.

மம்தா பானர்ஜி அடித்தளத்தின் வழியாகக் கட்டிடத்திற்குள் நுழைந்து, தனி விஐபி லிப்ட் வசதி இருந்தபோதிலும், பொது லிப்ட் மூலம் அலுவலகம் அமைந்துள்ள 11வது தளத்தை அடைந்தார். சுமார் 20 -25 நிமிடங்கள் அங்கு இருந்த முதல்வர் பின்னர் அங்கிருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோப்புக்களை எடுத்துச்சென்றார். சோதனை நடந்தபோது அலுவலகத்திலிருந்து பல கோப்புகள் வெளியே கொண்டுவரப்பட்டு முதலமைச்சரின் வாகனத்தில் வைக்கப்பட்டன.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி, அமலாக்கத்துறை அதிகாரிகள் பிரதீக் ஜெயின் அலுவலகத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தரவுகளை பறிமுதல் செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். அமலாக்கத்துறை சோதனை முடிந்த நிலையில் ஐ-பேக் நிறுவனத்தின் தலைவர் பிரதீக் ஜெயின் குடும்பத்தினர் தங்களது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

பிரதீக் ஜெயினின் மனைவி ஷேக்ஸ்பியர், காவல்நிலையத்தில் திருட்டு புகார் கொடுத்துள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின்போது தங்களது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் மேற்குவங்க அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

* காங், மார்க்சிஸ்ட் விமர்சனம்
மூத்த காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி,’ஐ-பேக் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் . அது மம்தா பானர்ஜியின் கட்சிக்காக என்ன செய்கிறது. அது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுகின்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக அவர்கள் அனைத்துவிதமான உத்திகளையும் வகுப்பதில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பணத்திற்கு ஈடாக வேறு எதையும் செய்வார்கள்.

அமலாக்கத்துறை , சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் நமது நாட்டின் ஆளும் கட்சியால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன’ என்றார். மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் முகமது சலீம் கூறுகையில்,’ அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐ-பேக் ஒரு தனியார் நிறுவனம். அதில் சோதனை நடத்தப்பட்டால் முதல்வர் ஏன் அங்கு செல்ல வேண்டும்? ஐ-பேக் பிரதீக் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையானது பாஜ மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே நடத்தப்பட்ட ஒரு நாடகமாக்கப்பட்ட விவகாரம்’ என்றார்.

* மம்தா மீது சட்ட நடவடிக்கை பா.ஜ ஆவேசம்
மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில்,’ நிலக்கரி கடத்தல் கும்பல் தொடர்பான பணமோசடி வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறையின் பணியில் தலையிட்டதாகக் கூறி, முதல்வர் மம்தா பானர்ஜி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். மேற்கு வங்க பா.ஜ மாநிலத் தலைவர் சாமிக் பட்டாச்சார்யா’ கூறுகையில்,’ திரிணாமுல் காங்கிரஸ் ஊழலில் மூழ்கியுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபடுகிறது, அதன் தலைவர்களில் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவினர், ஏன் முழு அமைப்பே, நிலக்கரி ஊழல் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளது. சட்டவிரோதமான மற்றும் அரசியலமைப்பிற்கு எதிராக மம்தா இந்த செயலை செய்துள்ளார். இதை அவர் ஒரு பழக்கமாக மாற்றியுள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

* ஈடி சோதனை நடத்தி மேற்குவங்கத்தை கைப்பற்றி விட முடியுமா? அமித்ஷாவுக்கு மம்தா கேள்வி
அமலாக்கத்துறை ரெய்டு தொடர்பாக முதல்வர் மம்தா கூறியதாவது: ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள் உத்திகள், வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் ரகசிய டிஜிட்டல் தகவல்களை அணுகுவதற்கு அமலாக்கத்துறை முயற்சிக்கிறது. எங்கள் கட்சியின் ஹார்ட் டிஸ்க், தேர்தல் வியூகம் மற்றும் திட்டங்கள் தொடர்பான முக்கிய தரவுகளை பறிமுதல் செய்ய முயற்சித்தார்கள். அதை நான் மீட்டுக்கொண்டு வந்துள்ளேன்.

அரசியல் கட்சிகளின் ஆவணங்களை சேகரிப்பது தான் அமலாக்கத்துறையின் கடமையா? இது சட்ட அமலாக்கத்துறை இல்லை. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. உள்துறை அமைச்சர் நாட்டைப் பாதுகாப்பவரைப் போல அல்லாமல் மிகவும் மோசமான உள்துறை அமைச்சரைப் போல் அமித்ஷா நடந்து கொள்கிறார். ஜெயினின் இல்லம் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையானது அரசியலமைப்புக்கு எதிரானது.

இது சட்ட அமலாக்கம் அல்ல. நாட்டைக் காக்க முடியாத, தேர்தலுக்கு முன்பு தொந்தரவு செய்ய ஏஜென்சிகளை அனுப்பும் இந்த மிக மோசமான உள்துறை அமைச்சர் இப்படித்தான் செயல்படுவாரா?. இதற்குப் பிறகு, நீங்கள் பூஜ்யமாகிவிடுவீர்கள். பிரதமர் தனது உள்துறை அமைச்சரைக் கட்டுப்படுத்த வேண்டும். ஐ பேக் அலுவலகத்தில் யாரும் உள்ளே இல்லாதபோது அவர்கள் சோதனையைத் தொடங்கினார்கள். அவர்கள் எங்கள் தரவு, தேர்தல் உத்திகள் மற்றும் தகவல்களைத் தங்கள் கணினி அமைப்புக்கு மாற்றியுள்ளனர்.

இது ஒரு குற்றம். அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்ல அவர்கள் முயற்சி செய்துள்ளனர். அந்த ஆவணங்களை மீண்டும் உருவாக்க வேண்டியிருந்தால், அதற்கு அதிக நேரம் எடுக்கும், அதற்குள் தேர்தலே முடிந்துவிடும். அவர்கள் இப்படிச் செய்தது நியாயமா?. அமலாக்கத்துறைக்கு ஏதேனும் தேவைப்பட்டிருந்தால், அவர்கள் வருமான வரித் துறையிடமிருந்து விவரங்களைப் பெற்றிருக்கலாம். பாஜதான் திருடர்களின் மிகப்பெரிய கட்சி.

மேற்குவங்கத்தில் உள்ள பாஜ கட்சி அலுவலகங்களில் நாங்கள் பதிலடி கொடுக்கும் விதமாக சோதனை நடத்தினால் என்ன நடக்கும்? பாஜ ஜனநாயகத்தின் கொலையாளி. எஸ்.ஐ.ஆர் செயல்முறை மூலம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களை நீக்குவதன் மூலமும், அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அலுவலகங்களில் சோதனை நடத்துவதன் மூலமும் அவர்களால் மாநிலத்தைக் கைப்பற்றிவிட முடியும் என்று நினைக்கிறார்களா?.ஜனநாயக முறையில் தேர்தலில் போராடி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

* இதற்கு முன் மம்தா….
* 2021 மே மாதம் நாரதா செய்தி நிறுவனத்தின் ஆன்லைன் ரகசிய நடவடிக்கை மூலம் அம்பலப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்களான சுப்ரதா முகர்ஜி, பிர்ஹாத் ஹக்கீம் மற்றும் எம்.எல்.ஏ மதன் மித்ரா ஆகியோருடன், கொல்கத்தாவின் முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரையும் சிபிஐ கைது செய்ததைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி நிஜாம் அரண்மனையில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

* 2019 பிப்ரவரியில், சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைய முயன்றபோது, மம்தா பானர்ஜி மத்திய கொல்கத்தாவின் எஸ்பிளனேட் பகுதியில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது 8 சிபிஐ அதிகாரிகள் போலீசால் பிடிக்கப்பட்டனர்.

* ஈடிக்கு எதிராக இன்று போராட்டம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆலோசனை நிறுவனமாக செயல்படும் ஐ -பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி இன்று போராட்ட பேரணி நடத்துகின்றார்.

* மம்தாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு
அமலாக்கத்துறை சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எந்த தலையீடும் இன்றி விசாரணை நடத்த அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நீதிமன்றத்தை அமலாக்கத்துறை அணுகியுள்ளது. இதேபோல் ஐ-பேக் நிறுவனமும் சோதனையின் சட்டப்பூர்வத் தன்மையை எதிர்த்து மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்குகுள் நீதிபதி சுவ்ரா கோஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகின்றது. இதே போல் அமலாக்கத்துறைக்கு எதிராக பிரதீக் ஜெயினும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Tags : West Bengal ,Enforcement Directorate ,I-PAC ,Trinamool ,Chief Minister ,Mamata ,Kolkata ,president ,Prateek Jain ,Mamata Banerjee ,Trinamool Congress ,West Bengal… ,
× RELATED ஓடும் ரயிலின் மேற்கூரையில் ஏறிய...