×

ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஓபிஎஸ், டிடிவி ஆகியோருடன் பாஜ கூட்டு 50 தொகுதிகள், அமைச்சரவையில் இடம் வேண்டும்: எடப்பாடியிடம் அமித்ஷா கண்டிப்பு

சென்னை: ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணியை நாங்கள் ஏற்படுத்திக் கொள்கிறோம். எங்களுக்கு 50 சீட், 3 அமைச்சர் பதவி வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தெரிவிப்பதாக கூறிவிட்டு அதிர்ச்சியுடன் சென்னை திரும்பியுள்ளார். தமிழகத்தில் தற்போது அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஜூரம் அடிக்கத் தொடங்கியுள்ளது. அதில் திமுக கூட்டணியைப் பொறுத்தவரை சிந்தாமல் சிதறாமல் உள்ளனர். ஆனால் அதிமுக கூட்டணி இன்னும் முடிவாகாமல் உள்ளது.

தற்போது அக்கூட்டணியில் பாஜ, பாமக (அ) மட்டுமே உள்ளன. பாமக (ரா), தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இன்னும் கூட்டணி பேசவில்லை. இதனால் கடுப்புடன் இருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுக்கோட்டை மற்றும் திருச்சிக்கு வந்தபோது சந்திக்க எடப்பாடி நேரம் கேட்டார். ஆனால் அவர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. டெல்லி சென்றவுடன் தன்னை வந்து சந்திக்கும்படி கூறிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி, தனது தீவிர ஆதரவாளரான வேலுமணியை அனுப்பி வைத்து சமாதானப்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து டெல்லி சென்று அமித்ஷாவை அவரது வீட்டில் சென்று சந்தித்தார். அப்போது, கூட்டணி குறித்து பேசச் சொன்னேன். நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எந்தக் கட்சிகளுடனும் பேசவில்லை. ஒரு தலைவரிடம் கூட நீங்கள் சமாதானமாக செல்லவில்லை. இதனால் உங்களிடம் கூட்டணி பேசவே யாரும் விரும்பவில்லை. அன்புமணியை கூட நாங்கள்தான் அனுப்ப வேண்டியதாகிவிட்டது. அதேபோல கடந்த மக்களவை தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டு பாஜ 18 சதவீத ஓட்டுக்களை பெற்றது.

அதனால் 50 தொகுதிகளை எங்களுக்கு கொடுத்து விடுங்கள். ராமதாஸ் தலைமையிலான பாமக, புதிய தமிழகம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருக்கு நாங்கள் சீட்டுகளை ஒதுக்கிக் கொள்கிறோம். நீங்கள், பாமக (அ), தேமுதிகவுக்கு மட்டும் சீட்டு கொடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல, வெற்றி பெற்றவுடன் அமைச்சரவையில் பாஜவுக்கு இடம் கொடுக்க வேண்டும். குறைந்தது 3 அமைச்சர் பதவி வேண்டும். பல மாநிலங்களில் நாங்கள் கூட்டணி அமைச்சரவை சொல்லித்தான் வெற்றி பெற்றோம். அதேபோல தற்போதும் அதே பார்முலாவைத்தான் பின்பற்ற முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, மூத்த தலைவர்களுடன் பேசிய பிறகு முடிவு எடுத்து சொல்கிறோம். கூட்டணி அமைச்சரவை வேண்டாம். தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளார். ஆனால் அதை அமித்ஷா ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது தமிழக அமைச்சர்கள் மீது நீங்கள் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பொங்கலுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கிறோம் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து 50 சீட், 3 அமைச்சர் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல பதிலை கூறுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து தேமுதிக நிர்வாகிகளை தொடர்பு கொண்ட பாஜ தலைவர்கள், இன்று நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை அறிவியுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால், தேமுதிக தரப்பில், தொகுதியை கூறினால்தான் ஏற்க முடியும் என்று கூறியுள்ளனர். தங்களுக்கு 18 சீட், ஒரு ராஜ்யசபா தொகுதி வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு 8 தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட், தேர்தல் செலவுக்கு பணம் தருகிறோம் என்று வாக்குறுதியளித்துள்ளனர். அதை தேமுதிக ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

தொகுதி உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியை அறிவிக்க தேமுதிக தயக்கம் காட்டுகிறது. கடந்த முறை ராஜ்யசபா தொகுதி தருவதாக கூறிவிட்டு கடைசியில் தராமல் ஏமாற்றிவிட்டனர். அதேபோல் தற்போதும் ஏமாற்றிவிடக்கூடாது என்று தேமுதிக தயக்கம் காட்டுகிறது. தொகுதியை முடிவு செய்த பிறகே கூட்டணியை அறிவிக்க முடியும் என்று பிரேமலதா கூறிவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் ராமதாசிடமும் அமித்ஷா பேசி வருகிறார் என்று கூறப்படுகிறது. இதனால் ஓரிரு நாளில் கூட்டணியை அறிவித்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. அதிக சீட்டும், அமைச்சரவையில் பங்கும் கேட்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடி பழனிசாமி தவித்து வருவதாக கூறப்படுகிறது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அமமுகவுக்கு 7 சீட்?
எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அதேநேரத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் டெல்லி சென்றார். நேற்று காலை ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ்கோயலை சந்தித்து பேசினார். அதன் பின் நேற்றிரவு 9 மணி அளவில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அதிமுக-பாஜ கூட்டணியில் டிடிவி.தினகரனின் அமமுகவுக்கு 7 சீட் கொடுக்க முடிவாகியுள்ளதாக தெரிகிறது. பாஜவுக்கு ஒதுக்கும் சீட்டில் இருந்து அமமுகவுக்கு ஒதுக்கப்படுகிறது. அதேபோல ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சீட்டுகள் ஒதுக்கப்பட உள்ளன.

Tags : BAJA ,RAMADAS ,KRISHNASAMI ,OPS ,DTV ,AMITSHAH ,EDAPADI ,Chennai ,Ramdas ,Krishnasamy ,DTV Dinakaran ,Amitsha ,Edapadi Palanisami ,
× RELATED தமிழக சட்டப்பேரவை தேர்தலில்; அதிமுக...