×

பாஜவிடம் முதலில் ஜிஎஸ்டி வரியை குறைக்கச் சொல்லுங்க… ஒன்றிய அரசு மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு; அதிமுக தேர்தல் கருத்துக் கேட்பு குழு ‘எஸ்கேப்’

விழுப்புரம்: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக, அதிமுகவில் தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்துக்களை கேட்டு தயாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி அதிமுகவில் துணை பொதுச்செயலாளர் நந்தம் விஸ்வநாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வளர்மதி, வைகைசெல்வன், ஜெயக்குமார், உதயகுமார், செம்மலை, பொன்னையன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு மண்டல வாரியாக சென்று கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறது.

அதன்படி விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை கொண்ட மண்டல கருத்து கேட்பு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள், வணிக சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் சார்ந்த கூட்டமைப்பினர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னதாகவே கட்சியினர் ஏற்பட்டால் குறிப்பிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுடன் கூட்டத்தை சேர்க்கும் வகையில் 3 மாவட்டங்களில் இருந்து அதிமுகவினரும் குவிந்தனர்.

கருத்து கேட்புக் கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் ஒன்றிய பாஜ அரசினால் ஏற்பட்ட பாதிப்புகளை கூறி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். தற்போது ஒன்றிய பாஜ அரசின் கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வருவதால் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற சொல்லுங்கள் என்று கூறி மனுக்களை அளித்து வெளிப்படையாக முறையிட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட அரிசி ஆலை சங்கத்தினர் பேசுகையில், இந்த மாவட்டத்தில் அரிசி ஆலைகள் அதிகளவில் இருக்கின்றன. ஜிஎஸ்டி வரியால் அரிசி ஆலை தொழில் நசுங்கிவிட்டது.

இதனை ரத்து செய்ய வேண்டும் அல்லது வரியை குறைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம். இந்த வரியை குறைத்தால்தான் இந்த தொழிலை மீட்க முடியும் எனத் தெரிவித்தனர். அதேபோல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் கடலூர் மாவட்ட மீனவர்கள் சங்கத்தினர் கூறுகையில், மீனவர்கள் பாதுகாப்பை ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண்டும். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தாக்கப்படுவதும், காயமடைவதுமாக உள்ளது. இதனை தடுத்து உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் மற்றும் மீன்பிடித் துறைமுகம் குறித்தும் தெரிவித்தனர். ஒன்றிய பாஜ அரசினால் பாதிக்கப்பட்ட வணிகர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் பாதிப்புகளை அடுத்தடுத்து எடுத்துக் கூறியதால் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

* அதிமுகவில் ஓபிஎஸ், டிடிவிக்கு இடமில்லை: ஜெயக்குமார் திட்டவட்டம்
தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்து கேட்பு கூட்டத்திற்கு பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி.தினகரனை சேர்ப்பதற்கு பாஜ தலைமை வலியுறுத்துவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், ‘தெளிவான முடிவில் இருந்த அன்புமணி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி கூட்டணியில் இணைந்து உள்ளார். டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரை இணைப்பது குறித்து ஏற்கனவே பொதுக்குழுவில் எடுத்த முடிவு தான். (அதிமுகவில் இருவரையும் சேர்ப்பது இல்லை) அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது ’என்றார். ஜனநாயகன் படம் வெளியாகாததற்கு ஒன்றிய அரசு தான் காரணம் என கூறுகிறார்களே என்ற கேள்விக்கு புறப்படலாம் என்று கூறிவிட்டு பதில் அளிக்காமல் சென்றார்.

Tags : BJP ,Union Government ,AIADMK ,Villupuram ,Tamil Nadu ,DMK ,Deputy General Secretary ,Nandam Viswanathan ,C.V. Shanmugam ,Valarmathi ,Vaigaiselvan ,Jayakumar ,Udayakumar ,
× RELATED தமிழக சட்டப்பேரவை தேர்தலில்; அதிமுக...