திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட பாஜ விரும்பாததால் அதிமுக சார்பில் போட்டியிட மூவர் அணி முட்டி மோதி வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். அடுத்த மாதம் இறுதியில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளிவர வாய்ப்புள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுவையும் பெற்றுள்ளன. தொழில் நகரமான திருப்பூரை பொறுத்தவரை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் தாராபுரம் (தனி), காங்கயம், அவினாசி (தனி), திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகும். திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட மும்முனை போட்டி நிலவி வருகிறது. இதனால் 3 தரப்பினரும் தங்களது ஆதரவாளர்களுடன் சீட் வாங்குவதற்காக காய் நகர்த்தி வருகிறார்கள்.
இதுகுறித்து, அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் சிறிய தொகுதியான திருப்பூர் தெற்கில் போட்டியிட அதிமுகவினர் அதிகளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஜெ.பேரவை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக உள்ள அட்லஸ் லோகநாதன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அதுபோல் மறைந்த முன்னாள் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ குணசேகரனின் மனைவியும், முன்னாள் கவுன்சிலருமான கவிதா குணசேகரனும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக விருப்ப மனுவும் கொடுத்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க முன்னாள் அமைச்சரும், தற்போதைய பல்லடம் தொகுதி எம்எல்ஏ-வுமான எம்எஸ்எம்.ஆனந்தனும் தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். பல்லடம் தொகுதியில் மீண்டும் போட்டியிட கரைப்புதூர் நடராஜன் தயாராகி வருகிறார். அவரது ஆதரவாளர்களும் இதற்கான வேலைகளில் ஈடுபட தொடங்கிவிட்டனர். ஏற்கனவே மாநகர் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில் இருக்கும் எம்எஸ்எம்.ஆனந்தன், பல்லடம் தொகுதியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்பதால் தனது கவனத்தை தெற்கு தொகுதிக்கு திருப்பியுள்ளார். இவ்வாறு மும்முனை போட்டி இருந்து வரும் நிலையில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் யாருக்கு பச்சை கொடி காட்டுகிறாரோ, அவருக்கு தான் சீட் என்பதால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்து வருகிறது. சிறுபான்மையினர் அதிகளவு உள்ள தொகுதி என்பதால் பாஜ அந்த தொகுதியை கேட்காது என்பதால் இந்த தொகுதிக்கு அதிமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது’ என்றனர்.
