நன்றி குங்குமம் டாக்டர்
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பொதுவாக சந்திக்கும் பிரச்னை என்றால் அது மலச்சிக்கல். ஆனால், இதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதுவே, நாள்பட்ட மலச்சிக்கலாக மாறும்போது, உடலில் வேறு பல நோய்களை உருவாக்கும் அபாயமும் உண்டு. எனவே, மலச்சிக்கல் பிரச்னையை அலட்சியபடுத்தாமல், உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தினை உலக மலச்சிக்கல் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது, யாருக்கெல்லாம் ஏற்படுகிறது. அதற்கான தீர்வு என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் நிபுணர் மருத்துவர் ஜி. பிரசாந்த் கிருஷ்ணா.
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு முறையாகச் செரிமானம் அடைந்து, உடல் இயக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டும் காரணியே மலம் கழித்தல். தினமும் அதிகாலையே அலாரம் அடித்தாற்போல், ஒருவருக்கு மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டு உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம்.
அதுவே, வாரத்திற்கு மூன்றுநாள்கள் கூட முழுமையாக மலம் கழிக்கமுடியவில்லை என்றால், அவர் மலச்சிக்கல் பிரச்னையில் இருக்கிறார் என்று அர்த்தம். இவர்கள் உரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நாள்பட்ட மலச்சிக்கல் பல்வேறு நோய்களை உருவாக்கி விடக்கூடும். மலச்சிக்கலை பொருத்தவரை, பலரும் பல்வேறு கருத்துகளை கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக ஒருவருக்கு ஜுரம் இருக்கிறது என்றால், அவரது உடல் சூட்டை வைத்து அவருக்கு ஜுரம் இருப்பதை அறிந்து கொள்ள முடியும். அல்லது ஒருவருக்கு அசிடிட்டி பிரச்னை இருக்கிறது என்றால் நெஞ்செரிச்சலை வைத்து உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், மலச்சிக்கலுக்கு இதுபோன்ற எந்தவரையறையும் இல்லாததால், பெரும்பாலானவர்களுக்கு தனக்கு மலச்சிக்கல் இருப்பதையே உணர முடிவதில்லை.
உதாரணமாக, சிலர் தினமும் மலம் கழிப்பார்கள். ஆனால், மிக குறைந்த அளவே கழிப்பார்கள். அதையும் சிரமப்பட்டே கழிப்பார்கள். அவர்களும் மலச்சிக்கல் பிரச்னையில் இருப்பவர்கள்தான்.
சிலருக்கு மலம் கழித்து முடித்த பிறகும், முழுமையாக மலம் கழித்த உணர்வு ஏற்படாமல் மீண்டும் வருவது போன்ற உணர்வு ஏற்படும், அவர்களும் மலச்சிக்கல் பிரச்னையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். சிலர், மலம் வெளியேறுவதில் சிரமம் இல்லை. ஆனால் டீ குடித்தால்தான் வருகிறது. சிகரெட் பிடித்தால்தான் வருகிறது. மாத்திரைகள் விழுங்கினால்தான் வருகிறது என்பார்கள். அவர்களும் மலச்சிக்கல் பிரச்னை உடையவர்கள்தான். இவர்கள் அனைவருமே உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
மலச்சிக்கலுக்கு காரணங்கள் என்றால், அது ஒருவரின் உணவு பழக்கமே.. அன்றாடம் உடலுக்கு கிடைக்க வேண்டிய நார்ச்சத்து கிடைக்கவில்லை என்றால், அது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். மற்றொரு காரணம், உரிய நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ளாமல் தள்ளிப்போடுவது, துரித உணவுகளை அதிகம் உண்ணுவது, மேற்கத்திய உணவுமுறைகளை பின்பற்றுவது போன்றவையும் காரணங்களாக அமைகிறது.
சிலர், நான் ஆரோக்கியமான உணவைதான் எடுத்துக் கொள்கிறேன். இருந்தாலும் எனக்கும் மலச்சிக்கல் இருக்கிறதே என்பார்கள். அவர்கள், உணவை ஆரோக்கியமானதாகதான் எடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், போதுமான அளவு தண்ணீர் அருந்தி இருக்க மாட்டார்கள். எனவே, அவர்களுக்கும் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படக்கூடும்.
துரித உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள் குடல் இயக்கங்களைத் தடுத்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும். மைதா சேர்த்த உணவுகள், நிச்சயம் மலச்சிக்கலை உண்டாக்கும். மசாலா நிறைந்த அசைவ உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்பது, செரிப்பதற்குக் கடினமான உணவுகளைச் சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் பருகாதது போன்றவையும் மலச்சிக்கலை உண்டாக்கும் மிக முக்கிய காரணிகள் ஆகும்.
சிலர் ஏதேனும் நோய்க்காக, தினசரி மருந்து மாத்திரை சாப்பிடுவார்கள், அவர்களுக்கும், மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புண்டு. சிலர் தேவையான அளவு தண்ணீர் அருந்தமாட்டார்கள். ஆனால், அவ்வப்போது டீ, காபி அருந்துவார்கள். அதுவும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
மனஅழுத்தத்துக்கும் மலச்சிக்கலுக்கும் நெருங்கிய உறவு உண்டு. மேலும், உடல் உழைப்பு இல்லாதவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மலத்தை அடக்குபவர்கள் போன்றவர்களுக்கு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.ஏதேனும், மருத்துவ அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படலாம்.
மலச்சிக்கலுக்கு தீர்வு
மலச்சிக்கலுக்கு முழுமையான தீர்வு வேண்டும் என்றால், அவர்கள், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 2-3 லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.
நார்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் பச்சை கீரைகள் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் ஒரு நாளைக்கு 25- 30 கிராம் அளவிற்கு உணவில் நார்ச்சத்து எடுத்துக் கொண்டால்தான், தினசரி மலம் கழித்தலில் பிரச்னை இருக்காது.
சிகிச்சைமுறை
மலச்சிக்கல் ஏற்பட்டவுடன், உடனடியாக மலமிளக்கி மருந்துகளின் ஆதரவைத் தேடாமல், மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, உணவு மற்றும் வாழ்வியல் முறை மாற்றங்களின் மூலமே சரிசெய்ய முயல வேண்டும். திடீரென மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால், முந்தைய நாள் சாப்பிட்ட உணவின் தன்மையை ஆராய்ந்தாலே போதும். காரணம் பெரும்பாலும் கிடைத்துவிடும்.
முதிர்ந்த வயதில் குடலின் செயல்பாடுகள் பெருமளவில் குறைந்திருக்கும்போது மலமிளக்கி மருந்துகளைத் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். ஆனால், பதினைந்து வயதிலிருந்தே மலத்தை வெளியேற்ற, மருந்துகளை நாடுவது மிகப் பெரிய தவறு. மலச்சிக்கலில் முழுமையான தீர்வு என்றால், அது கட்டாயமாக உணவு பழக்கத்தினாலேயே மாற்ற முடியும். மேலும், உடற்பயிற்சிகள் மேற்கொள்வது நல்ல தீர்வாக இருக்கும். அதிலும், குறிப்பாக அரோபிக் பயிற்சிகள் மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வாக தரும்.
குடலுக்கு நன்மை செய்யக்கூடிய புரோபயாடிக் கூறுகள் நிறைந்த மோரை அவ்வப்போது குடித்து வந்தாலும், மலச்சிக்கல் குணமாகும். இளநீர், குடலின் அசைவுகளை அதிகரிக்க (Increases peristalsis) உதவும். நிறைய தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலுக்கான முதல் மருந்து. மலச்சிக்கல் உள்ளவர்கள், குளிர்பானங்கள் அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சிறிதளவு விளக்கெண்ணெயை மலமிளக்கியாகக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகிக்கலாம்.
குறிப்பிட்ட கால இடைவெளியில், மருத்துவரின் ஆலோசனைப்படி பேதி மருந்துகளை எடுத்துக்கொண்டு, செரிமானப் பகுதிகளை புத்துணர்வுடன் வைத்துக்கொள்வது அவசியம். பேதி மருந்துகள் மலச்சிக்கலை நீக்கும்; உடலில் தேங்கிய நச்சுப் பொருள்களை வெளியேற்றவும் உதவும். இவற்றை முறையாக பின்பற்றி வந்தால் மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு காணலாம். =
தொகுப்பு: இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் நிபுணர் மருத்துவர் ஜி. பிரசாந்த் கிருஷ்ணா
