அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டாவை குருவாக ஏற்றான் இந்திரன். துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதை அறிந்த இந்திரன் துவஷ்டாவை கொன்று விட்டான். இதனால் பிரம்மஹத்தி தோஷம் இந்திரனுக்கு ஏற்பட்டது. பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு தோஷ நிவர்த்தி தேடினான். குரு பகவான் இந்திரனிடம், பாபநாசத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை “பாபநாசநாதர்” என்கின்றனர். இத்தலத்திற்கு “இந்திரகீழ சேத்திரம்’ என்ற பெயர் பெற்றது.
அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும். அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை “நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும் அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இப்பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.
பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு அருகேதான் சமநிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு வரும் தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இந்த தெய்வத்திற்கு வியாழன், சனி, செவ்வாய், கேது, சந்திரன் ஆகிய கிரகங்கள் நாமாகரணம் செய்துள்ளன.
* சனி தோஷத்தாலோ அல்லது கர்ம தோஷத்தாலோ பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை அன்று தாமிரபரணியில் நீராடி பாபநாச நாதருக்கும் உலகம்மைக்கும் அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டு அங்குள்ளவர்கள் உங்களால் முடிந்த அளவு அன்னம் கொடுத்தால் உங்கள் கர்ம வினைகள் குறையும்.
* தனிப்பட்ட ஜாதகத்தில் 7ம் பாவகத்தில் வியாழன் – சனி தொடர்புள்ளவர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்து இங்குவந்து வழிபட்டால் சனி தோஷம் நீங்கப் பெறுவார்கள்.
* குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மற்றும் நீண்டகாலமாக திருமணம் நடைபெறாதவர்களும் இங்கு வந்து வழிபட்டால் அந்த தோஷம் நீங்கி திருமண தோஷம் நீங்கும்.
* இத்திருக்கோயிலில் உள்ள உரலில் மஞ்சள் இடித்து அதில் கொஞ்சம் மஞ்சளை வீட்டிற்கு எடுத்து வந்தாள். சுபகாரியங்கள் வீட்டில் நிகழும். இதில் இடிக்கப்படும் மஞ்சள் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த அபிஷேகத் தீர்த்தத்தை வீட்டிற்கு எடுத்து வந்து நோய் நீங்கப் பெறுவார்கள்.
