×

சாட்சி சொல்ல வந்த இறைவன்

அவளிவநல்லூர்

பிரார்த்தனையும் நம்பிக்கையும் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள்தான். ஆனால், நிகழவே முடியாது என்று நம்பப்படும் விஷயத்தைக் கூட, அது நிகழ்த்திக் காட்டிவிடும் வலிமையுடையது அல்லவா? அதனை எடுத்துக் காட்டுவதே பின் வரும் நிகழ்வு – இறுதியில் இறைவனும் ஓர் ஊரும் தங்கள் பெயர் பெற்ற புனித நிகழ்வு!அந்த ஊர் ஆலய அர்ச்சகர் ஒரு பெரும் சிக்கலினால் மனமுடைந்து போயிருந்தார். எல்லாக் கதவுகளும் அடைபட்டுப் போனதால் இறுதியில், தான் அனுதினமும் பூஜை செய்யும் அந்த இறைவனையே சரணடைந்தார்.

என்னதான் நடந்தது?

தன் இரண்டு பெண்களுக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்து அவரவர் புகுந்த வீட்டிற்கும் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார் அர்ச்சகர். ஆனால், அந்த மகிழ்ச்சிதான் நீடிக்கவில்லை.
அவருடைய மூத்த மகள் சுசீலை புகுந்த வீட்டிலிருந்து விரட்டப்பட்டு பிறந்த வீட்டிற்கு ஒருநாள் வந்து சேர்ந்தாள். அதற்கு முன்பே அவளுடைய கணவன் காசி யாத்திரைக்குப் புறப்பட்டுப் போயிருந்தான். மகளின் தோற்றம் கண்டு அர்ச்சகர் கண்ணீர் வடித்தார். பெருநோய் அவளிடம் விளையாடியிருந்ததால்! மேடுபள்ளங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை?

‌போக்குவரத்து ஏதும் இல்லாத காலம் அது. உணவு விடுதிகளும் எங்கும் கிடையாது. வழியில் உள்ள சத்திரங்களே பெரிதும் உதவின. அப்படிப் பயணித்துப் போய், காசி விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித்த பின் ஊர் திரும்பிய மூத்த மாப்பிள்ளை முதலில் நேராக தன் மாமனார் வீட்டிற்குச் சென்றார். வாசலில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும் பெண்ணைப் பொருட் படுத்தாமல், நேராக உள்ளே சென்று தன் மாமனாரிடம் நலம் விசாரித்தார். பின் புறப்பட யத்தனித்தவரிடம் அவரது மாமனார் ‘‘மாப்பிள்ளை, உங்கள் பத்தினியையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்’’ என்றார்.

‘‘அவள் புக்ககத்தில் அல்லவா இருக் கிறாள்?’’ எனக் கேட்டார் மாப்பிள்ளை. ‘‘இருந்தாள். ஆனால் வைசூரி தாக்கி, பார்வையும் இழந்து, உருவமும் கோரமாய் மாறிப் போனவளை அங்கேயிருந்து விரட்டியடித்து விட்டார்கள். அவள்தான் அதோ வாசலில் அமர்ந்திருக்கும் என் மூத்த மகள், உங்கள் பத்தினி. எதிர்பாராத விசித்திரங்கள் நிறைந்ததுதானே மனித வாழ்க்கை?’’ என அர்ச்சகர் கூறவும் திடுக்கிட்டார் மாப்பிள்ளை, இடி தாக்கியது போல்!

அந்த நேரம் பார்த்து அர்ச்சகரின் இரண்டாவது மகளும் தன் அப்பாவைப் பார்க்க அங்கு வந்து சேர்ந்தாள். வந்தது வினை! இரு பெண்களும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள். விதியின் விளையாட்டும் துவங்கியது, மாப்பிள்ளைக்கு மதி தடுமாறிப் போனதால்!‘‘இல்லை, நான் நம்ப மாட்டேன்! நீங்கள் பொய் சொல்கிறீர்கள்! இப்போது இங்கு வந்தாளே இவள் தான் என் மனைவி! கண் பார்வையின்றி குரூரமாக அமர்ந்திருப்பவளே உங்கள் இரண்டாவது பெண். குரூரமான அவளை என் தலையில் கட்டப் பார்க்கிறீர்கள். உண்மைதான்! இதுவும் வாழ்க்கையின் விசித்திரம் தான். கொடுமையிலும் கொடுமையான விசித்திரம். ஒரு குரூபியை என் மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாது!’’ என்று தர்மத்திற்கு மாறாக பிறர் மனைவியை உரிமை கோரினார். ஊராரும் எவ்வளவோ எடுத்துக் கூறினர். மாப்பிள்ளை உண்மையை ஒப்புக்கொள்ளவேயில்லை.

துயரத்தில் மூழ்கிய குருக்கள் ‘‘மகேசா! இது என்ன சோதனை? நீயே துணை!’’ என் மனமுருக வேண்டினார், அழுது கொண்டே!கைவிடவில்லை முக்கண்ணன். ‘‘எல்லோரையும் அழைத்துக் கொண்டு எம் சந்நதிக்கு வாரும்!’’ என்று அசரீரியாகக் கூறினார். தர்மமும், நீதியும், நியாயமும் காப்பாற்றப்பட வேண்டுமல்லவா?அதன்படி அர்ச்சகர் தன் பெண்களை அழைத்துக் கொண்டு ஊர் மக்களுடன் தான் அனுதினமும் பூஜை செய்யும் இறைவன் சந்நதிக்கு முன் போய் நின்றார். கர்ப்பக் கிரகத்தில், ஈசன் தோன்றினார், தன் ரிஷப வாகனத்தில்.

மாப்பிள்ளையிடம் இறைவன், குருக்களின் குரூரமான மூத்த மகளைச் சுட்டிக் காட்டி, ‘‘ஐயம் வேண்டாம், நீ யாரை அக்னி சாட்சியாக திருமணம் செய்து கொண்டாயோ ‘அவள் இவள்’ தான்!’’ என்று சொன்னார்.மாப்பிள்ளையின் ஐயமும் தீர்ந்தது, இறையே வந்து சாட்சி சொன்னதனால்! அத்துடன் நில்லாமல் இறைவன் மூத்த பெண்ணிடம், ‘‘இவ்வளவுநாள் நீ பட்ட துன்பங்களுக்குப் பரிகாரமாக கோயில் திருக்குளத்தில் மூழ்கி எழு, நீ உன் இழந்த கண்களைப் பெறுவதுடன் முன்னைவிட இன்னும் அழகான தோற்றமும் பெறுவாய்’’ என்று கூறி மறைந்தார். அப்படியே நடந்தது. மாப்பிள்ளையும் சந்தோஷமாக தன் மனைவியை ஏற்றுக் கொண்டார். முன்னிலும் பேரழகியாகி விட்டாளே, கசக்குமா என்ன?

இறைவனே வந்து ‘அவள்‌ இவள் தான்’ என்று சாட்சி சொல்லி தம்பதியினரைச் சேர்த்து வைத்து ஒரு பெரும் பிரச்னையைத் தீர்த்து வைத்ததால் ஊர்ப் பெயருடன் சேர்ந்து அன்று முதல் அந்த ஊர் ‘அவளிவநல்லூர்’ (அவள்+இவள்+நல்லூர்) என்று பெயர் பெற்றது. சாட்சி சொன்ன இறைவன் ‘சாட்சிநாயகேஸ்வர்’ என்றும் அழைக்கப்படலானார். பின் அதுவே மாறி ‘சாட்சிநாதேஸ்வர்’ என்றாயிற்று.

இந்த மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் ஆலயத்தின் கர்ப்ப கிரகத்தில் இறைவனுக்குப் பின்பக்கம் உள்ள சுவரில் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம்.ஆலய சிறப்புகள்: பஞ்ஜாரண்ய க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. ராஜகோபுரம் இல்லாத கிழக்கு நோக்கி இருக்கும் இவ்வாலயத்தின் மூலவர், சுயம்புலிங்க வடிவினர். வெளிப் பிராகாரத்தில் அம்பாள் சௌந்திரவல்லி காட்சி தருகிறாள். மற்ற திருவுருவங்கள் உள்ளே உள்ளன. பிரம்மனும், சூரியனும், வராக உருவில் இருந்த பெருமாளும், அகத்திய முனிவரும் வழிபட்ட ஆலயம். மற்ற சிவாலயங்களைப் போன்று பூஜைகளும், குறிப்பாக அமாவாசையன்று சிறப்புப் பூஜைகளும் நடைபெறுகின்றன.

கண்பார்வை இழந்தவர்களும், மற்ற தீராத நோய் உள்ளவர்களும், குறிப்பாக, பிரிந்த தம்பதியரும் இக்கோயிலின் திருக்குளத்தில் மூழ்கி எழுந்தால் தங்கள் குறைகள் நீங்கப் பெறுவர் என்பது நம்பிக்கை.நாமும் சென்று சாட்சி நாதேஸ்வரிடமும் சௌந்திரவல்லி தேவியிடமும் மனமுருக வேண்ட, நம் துயரத்தையும் அவர்கள் தீர்த்து வைப்பார்கள் அல்லவா?

அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து 26 கி.மீ தூரத்தில், அம்மாப்பேட்டை தடத்தில் உள்ளது.

P. ராஜன் ராஜு

Tags : Avalivanallur ,
× RELATED திருநெல்வேலி, உலகம்மை உடனுறை பாபநாச நாதர்