வானிலை ஆராய்ச்சி மையம் (IMD) வானிலை முன்னறிவிப்பு, புயல் எச்சரிக்கை, விவசாய ஆலோசனைகள் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது. இது, மழைப்பொழிவு, காலநிலை மாற்றம், நிலநடுக்கவியல் மற்றும் வான்வழி போக்குவரத்து பாதுகாப்பிற்கான துல்லியமான தரவுகளை வழங்குகிறது.வானிலை நிகழ்வுகளை அறிவதற்காக சேலம், கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஹைட்ரஜன் பலூன் பறக்க விடுவதற்கான அலுவலகம் அமைக்க இந்திய வானிலை நிலையம் அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி, இடம் தேர்வுசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடம் தேர்வு செய்த பிறகு இதுகுறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்படும். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அலுவலகம் அமைக்கப்படும். இந்த அலுவலகத்தில் இருந்து பலூனில் 50 கிலோ ஹைட்ரஜன் நிரப்பப்படும். மேலும், அதில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு வானில் பறக்கவிடப்படும்.
இந்த பலூன் வானில் சுமார் 30 கிலோ மீட்டர் வரை பறக்கும் தன்மை கொண்டது. இவை, வெப்பநிலை, அழுத்தம், காற்றின் வேகம், ஈரப்பதம் போன்ற தகவல்களை சேகரித்து துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளுக்கு உதவுகின்றன. குறிப்பாக, புயல்களை கணிக்கவும், வளிமண்டல நிலைகளை ஆய்வு செய்யவும் இது பயன்படுகிறது. இந்த பலூன் மேல்நோக்கி உயரும்போது வளிமண்டல அழுத்தம் குறைகிறது. இதனால், பலூன் பெரிதாக விரிவடைந்து இறுதியில் வெடித்துவிடும். தினமும் காலை, மாலை என 2 வேளைகளில் இந்த பலூன் பறக்கவிடப்பட்டு வானிலை நிகழ்வு அறியப்படும்.
ஹைட்ரஜன் பலூன் மூலம் வானிலை ஆய்வு செய்யப்படுவதால், வளிமண்டல அழுத்தம், வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் திசை போன்ற தரவுகளை குறைந்த செலவில் 30 கி.மீ உயரம் வரை துல்லியமாக பெற முடிகிறது. இது ஹீலியத்தைவிட மலிவானது, குறைந்த அடர்த்தி கொண்டது மற்றும் சவ்வு வழியாக பரவுதல் விகிதம் குறைவு, இதனால், அதிக உயரத்தில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும். முதல்கட்டமாக, விரைவில் சேலம் மாவட்டத்தில் அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
