கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

பூந்தமல்லி, ஜன.8: பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பூந்தமல்லி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சுபாஷினி தலைமையில் உதவி ஆய்வாளர் நாட்டாளம்மை உள்ளிட்ட போலீஸ் குழுவினர் பூந்தமல்லி, போரூர், மாங்காடு, நசரத்பேட்டை, செவ்வாய்பேட்டை, வெள்ளவேடு ஆகிய பகுதிகளில் கஞ்சா பான்பராக், குட்கா, கூலிப் போன்ற போதைப் பொருள் விற்பனை தடுப்பதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று பூந்தமல்லி பேருந்து நிலையம் எதிரில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்த போது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சன் (30) என்பது தெரிய வந்தது.
இவர் வெளி மாநிலத்தில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து பூந்தமல்லி பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணைக்கு பிறகு அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: