×

அரசு கல்லூரிகளில் பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி: உலகம் உங்கள் கையில் திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 

சென்னை: அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை வழங்கும் ‘‘உலகம் உங்கள் கையில்” என்னும் மாபெரும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, மடிக்கணினிகளை வழங்கினார். தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப் படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலப் “புதுமைப்பெண்” திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயிலத் “தமிழ்ப் புதல்வன்” ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

“உலகம் உங்கள் கையில்” திட்டத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குதல் 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் செயற்கை நுண்ணறிவு உலகெங்கும் பெரும் தாக்கத்தை உருவாக்கி வரும் இந்த வேளையில், நமது மாணவர்களின் தொழில்நுட்ப அறிவையும் அவர்களின் தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் தொடர்ந்து வழங்க வேண்டிய வரலாற்றுச் தேவை தற்போது எழுந்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டின் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் பயின்று வரும் மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்பச் சாதனங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக இந்நிதியாண்டில் ரூ.2000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படும். அதன் முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தினை நேற்று முதல்வர் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் டெல், எச்பி போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது. மடிக்கணினிகளை பெற்றுக் கொண்ட மாணவ, மாணவியர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக, முதல்வர் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிரிவு வாரியான 40 கண்காட்சி அரங்குகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் உருவாக்கிய புதுமையான படைப்புகள், பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் தயாரிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், திறன் மேம்பாட்டு முன்னெடுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டதை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் யூ-டியூபர், ஸ்டார்ட்-அப் நிறுவன அதிபர்கள் தங்கள் வெற்றிக் கதைகளை பகிர்ந்து கொண்டு, ஸ்டார்ட்-அப் நிறுவன வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா ஆகியோரிடம் மாணவ, மாணவியர்கள், டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்து வரும் நிலையில் கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள், மிகப்பெரிய நூலகங்கள் அமைப்பது ஆகியவற்றின் பயன்குறித்தும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த வளர்ச்சி குறித்தும், சென்னை மாநகர் போன்று பிற மாவட்டங்களிலும் தொழிற்சாலைகளின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வசதி குறித்தும் கேள்விகளை எழுப்பி, அதற்கான விடைகளை அறிந்து கொண்டனர். தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கெண்டு வரும் பேராசிரியர்கள் சந்தோஷ், பிரியா, ஐஸ்வர்யா ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, தங்கள் ஆராய்ச்சிக்கு உதவிய தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்தனர்.“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் பிரசாந்த் மற்றும் பயிற்சி கூடுதல் எஸ்பி இன்பா ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் வெற்றி பெறுவதற்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றிட நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுவது குறித்தும், கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை, தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தது குறித்தும், இது மாநிலத்தில் தகவல் தொழில் நுட்பத்துறை மாபெரும் வளர்ச்சிக்கு வித்திட்டது.

தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க டைடல், மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதும், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வித் துறையில் தமிழ்நாடு சாதனை படைத்து வருவது குறித்தும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எடுத்துரைத்தார். தமிழ்நாடு சூப்பர் மாநிலம், பொருளாதார, சமூக மற்றும் எதிர்கால அம்சங்களில் தமிழ்நாடு எவ்வாறு ஒரு சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்பது குறித்து பொருளாதார வல்லுநர் அரவிந்த் சுப்பிரமணியன், தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தன் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தாமஸ் டோஸ் ஆகியோர் எடுத்துரைத்தனர். அதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளின் சிறப்பம்சங்கள் குறித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி விளக்கினார்.

நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், அமைச்சர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சிறப்பு விருந்தினர் இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், தொழிலதிபர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவன அதிபர்கள், நடிகர்கள் கார்த்தி, விஜய்சேதுபதி, மணிகண்டன், விளையாட்டுத் துறை, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,
× RELATED விறுவிறுப்பாக தயாராகும் திமுக...