×

வத்திராயிருப்பு பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி: பொங்கலுக்கு அனல் பறக்கும்

வத்திராயிருப்பு: தைப்பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி வத்திராயிருப்பு பகுதியில் தற்காலிக வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், சேதுநாராயணபுரம், மகாராஜபுரம், கூமாப்பட்டி, நெடுங்குளம், கான்சாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த காளைகள் மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு, சக்குடி, திருப்பூர், திருச்சி, ஈரோடு, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்காக கொண்டு செல்லப்படும்.

இந்தாண்டு தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜன.15, பாலமேட்டில் ஜன.16, அலங்காநல்லூரில் ஜன.17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் பிற பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலக்குவதற்காக வத்திராயிருப்பு பகுதியில் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நீச்சல் பயிற்சி, மண் குத்துதல், நடைப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் கூறுகையில், ‘தைப்பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலக்குவதற்காக காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறோம். மதுரை மட்டுமின்றி பிறமாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்கும் காளைகள் கொண்டு செல்வோம். காளைகளுக்கு பாதாம், முந்திரி, பேரீச்சம்பழம், பருத்திக்கொட்டை, புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் தினமும் 3 வேளை கொடுத்து தயார்படுத்தி வருகிறோம். வயல்வெளிகளில் தற்காலிக வாடிவாசல் அமைத்து பயிற்சி அளித்து வருகிறோம்’ என்றனர்.

Tags : Jallikattu ,Vathirairuppu ,Thai Pongal festival ,Virudhunagar district ,Kansapuram ,Sethunarayanapuram ,Maharajapuram ,Koomapatti ,Nedungulam ,
× RELATED 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்!