ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள சைக்ளோமென் மலர் அலங்காரத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். தற்போது 2வது சீசனுக்கான பூங்கா தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டு விதைப்பு மற்றும் நாற்று நடவு பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பூங்கா மலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பால்சம், பிகோனியோ, சைக்ளோமென் போன்ற மலர் தொட்டிகளை கொண்டு மலர் கோபுரம் அமைக்கப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இதில், பல வண்ணங்களில் வைக்கப்பட்டுள்ள சைக்ளோமென் மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
