கன்னியாகுமரி – டெல்லி இடையே இயங்கும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாக மாறுமா?.. கிடப்பில் கிடக்கும் நீண்ட கால கோரிக்கை

 

 

நாகர்கோவில்: கன்னியாகுமரி – டெல்லி இடையிலான திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு வேலை வாய்ப்பு, உயர்கல்வி உள்பட பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். சென்னையில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜி.டி. எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் டெல்லி செல்கின்றன. சென்னையைத் தாண்டித்தான் மாநிலத்தின் பெரும்பகுதியே உள்ளது. மேற்கண்ட ரயில்கள் தமிழ்நாட்டுக்குள் மொத்தம் 60 கி.மீ., தூரம் மட்டுமே வருகின்றன.

சென்னை வரை மட்டுமே ரயில்களை இயக்கி, ஒட்டுமொத்த தமிழகத்துக்கே ரயில்களை இயக்குவதாக ரயில்வே கணக்கு காட்டுகிறது. சென்னை வரை மட்டுமே இயக்கப்படும் இந்த ரயில்களினால், மாநிலத்தின் பெரும்பான்மை மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் நிலைமை இப்படி இல்லை. டெல்லி போன்ற வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் எல்லாம் கர்நாடகா முழுவதும், ஆந்திரா முழுவதும், கேரளா முழுவதும் இயக்கப்படுகின்றன. டெல்லியில் இருந்து இயக்கப்படும் எந்த ரயில்களாக இருந்தாலும் அவை அனைத்துமே அந்த மாநிலங்கள் முழுமைக்குமாக பயன்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அத்தனையும் சென்னையோடு நின்று விடுகின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

கன்னியாகுமரி – டெல்லி இடையே வாரத்துக்கு இரு நாட்கள் (புதன், வெள்ளி) மட்டுமே இயங்கும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் மட்டுமே தென் மாவட்டங்கள் வழியாக செல்கிறது. இது தவிர சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், வாரத்தில் இரண்டு தினங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து செல்கிறது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளும் பயன்படும் வகையில், கன்னியாகுமரியிலிருந்து டெல்லிக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் இயங்கும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலை (கன்னியாகுமரி – நிஜாமுதீன்) தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை உள்ள இருப்பு பாதை இரட்டை பாதையாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது. எனவே சென்னையிலிருந்து இயக்கப்படும் ஒரு சில ரயில்களை இரட்டை பாதை உள்ள பாதை வழியாக மதுரை, திருச்சி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். முதலில் சென்னை எழும்பூரிலிருந்து படெல்லி செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க இயக்க வேண்டும்.

இவ்வாறு நீட்டிப்பு செய்து இயக்கும் போது தமிழ்நாட்டில் தெற்கே உள்ள கடைசி மாவட்டமான கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு சென்னை வழியாக சுமார் 15 மாவட்ட ரயில் நிலையங்களில் சுமார் 15 முதல் 20 ரயில் நிலையங்களில் நின்று செல்லுமாறு இயக்கப்படும் போது அனைத்து பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர். இது குறித்து பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், கன்னியாகுமரி – டெல்லி இடையே செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலான திருக்குறள் எக்ஸ்பிரஸ் நீண்ட தூர ரயிலாக இருக்கின்ற காரணத்தால் அது அனைத்து ரயில்வே மண்டலங்களும் கலந்து ஆலோசித்து ஒரே கருத்து ஒற்றுமைக்கு கொண்டு வந்து,

இந்த திருக்குறள் ரயில் சேவை அதிகரித்து இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகளால் பலமுறை திட்ட கருத்துரு சமர்ப்பித்து நடக்காமல் போய் விட்டது. எனவே கிடப்பில் உள்ள இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதே போல் சென்னை – டெல்லி இடையிலான கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். சென்னை எழும்பூர் வழியாக இயங்குவதால் தென் மாவட்ட பயணிகளுக்கு சென்னைக்கு செல்ல தினசரி பகல் நேர ரயில் வசதி கிடைக்கும். இது தென் மாவட்டத்திலிருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்றனர்.

Related Stories: