- கேரள உயர் நீதிமன்றம்
- உட்கார
- திருவனந்தபுரம்
- சிறப்பு விசாரணை குழு
- சபரிமலை ஐயப்பன் கோவில்
- பதனம்திட்டா மாவட்டம்
- கேரளா
திருவனந்தபுரம் : சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்ஐடி) மேலும் 6 வாரங்கள் அவகாசம் வழங்கி கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மற்றும் அதன் பீடத்தின் மீதான தங்கத் தகடுகளுக்கு தங்க முலாம் பூசும் பணி கடந்த 2019-ம் ஆண்டு உன்னி கிருஷ்ணன் போற்றியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணி முடிந்த நிலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், தங்கம் மாயமானது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது. இந்த வழக்கு தொடர்பாக, உன்னிகிருஷ்ணன் போற்றி மற்றும் திருவாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு ஆகியோரை எஸ்ஐடி அதிகாரிகள் கைது செய்தனர்.
இதற்கிடையே சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ருக்கலாம் என சி.பி.ஐ.,க்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து முன்னாள் துாதரக ஊழியர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜனவரி 05) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை கேரளா ஐகோர்ட் நீதிபதிகள் ராஜா விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. மேலும், வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்ஐடி) மேலும் 6 வாரங்கள் நீதிபதிகள் அவகாசம் வழங்கினர். ஏற்கனவே வரும் ஜனவரி 19ம் தேதி சிறப்பு புலனாய்வு குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கேரள ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
